தும்பாட், மார்ச் 9 :
கிளாந்தானில் ஏற்பட்ட வெள்ளம் பல காவல் நிலையங்களைச் சேதப்படுத்தியது, குறிப்பாக தாய்லாந்தின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள ஐந்து காவல் நிலையங்கள் மிக மோசமாக சேதமடைந்துள்ளன.
கோலோக் ஆற்றில் நீர் நிரம்பி வழிந்ததால், பாசீர் மாஸ் மாவட்டத்தில் உள்ள ரந்தாவ் பாஞ்சாங், பாகோங் மற்றும் ஜெராம் பெர்டா காவல் நிலையங்கள், தும்பாட் மாவட்டத்தில் உள்ள சிம்பாங்கான் மற்றும் கோல ஜம்பு காவல் நிலையங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன என்று கிளாந்தான் துணைக் காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் ஜாக்கி ஹருன் இன்று தெரிவித்தார்.
“இந்த காவல் நிலையங்களில் வெள்ளநீர் ஒன்று முதல் 1.5 மீட்டர் வரை உயர்ந்து, கட்டிடங்களின் கட்டமைப்பை சேதப்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான தளபாடங்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டன, ”என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
காவல் நிலையங்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்த அறிக்கை கோலாலம்பூர் புக்கிட் அமானில் உள்ள காவல்துறை தலைமையகத்திற்கு அனுப்பப்படும் என்றார்.
இன்றைய நிலவரப்படி வெள்ளச் சேதம் குறித்து காவல்துறைக்கு 1,278 புகார்கள் கிடைத்துள்ளதாகவும் முகமட் ஜாக்கி கூறினார்.
பெரும்பாலான அறிக்கைகள் வீடுகள் மற்றும் பயிர்களுக்கு சேதம் விளைவித்ததாக உள்ளன, என்றார்.
“அனைத்து அறிக்கைகளும் மேல் நடவடிக்கைக்காக மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவிற்கு அனுப்பப்படும்” என்று அவர் கூறினார்.-