புறநகர் இந்திய சமூகமும் இணையம், தொழில்நுட்ப வசதிகளைப் பெறும் – கஹாங் தொகுதியில் போட்டியிடும் வித்யானந்தன் உறுதி

ஜோகூர் தேர்தலில் கஹாங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் ஆர். வித்யானந்தன் 2013-2018 காலகட்டத்திலும் கடந்த இரண்டு ஆண்டுகளாகவும் மாநில ஆட்சிக் குழுவில் இடம் பெற்றிருந்தார். கஹாங் தொகுதியை 2008 முதல் மூன்று தவணைகளாக வெற்றிகரமாகத் தற்காத்து வந்திருக்கிறார்.

இந்தத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் தனது வெற்றி வாய்ப்புகள் – பொதுவாக ஜோகூர் இந்திய சமூகத்திற்கான எதிர்காலத் திட்டங்கள் -இதுவரையில் ஆற்றி வந்திருக்கும் சேவைகள் – ஆகியவை குறித்து கஹாங்கில் அமைந்திருக்கும் தனது தேர்தல் நடவடிக்கை அறையில் விரிவான விளக்கங்களை அளித்தார் வித்யானந்தன்.
அவருடன் நடத்திய நேர்காணலின் சில முக்கியப் பகுதிகள்:

கஹாங் தொகுதியில் மீண்டும் வெற்றி பெறுவேன்
நான்காவது முறையாக நான் போட்டியிடும் கஹாங் தொகுயில் மீண்டும் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. கடந்த காலத்தில் இந்தத் தொகுதிக்கு நான் வழங்கிய சேவைகள், கொண்டு வந்திருக்கும் மேம்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் என்னை மீண்டும் இந்தத் தொகுதி வாக்காளர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என நம்புகிறேன்.

புறநகர் மேம்பாடுகளால் இந்திய சமூகமும் பலனடையும்
கஹாங் ஒரு புறநகர்த் தொகுதி. மற்ற நகர்ப்புறத் தொகுதிகளைப் போன்ற வளர்ச்சித் திட்டங்களையோ பிரமாண்டமான மேம்பாட்டுத் திட்டங்களையோ இங்கே நாம் திட்டமிட முடியாது. இதுபோன்ற தொகுதிகளில் இருக்கும் பிரச்சினைகள், மக்களின் தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் நாம் திட்டங்களை மேற்கொள்ள முடியும். அதைத்தான் நாங்களும் செய்திருக்கிறோம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவிட்-19 தொடர்பில் ஏற்பட்ட சமூக மாற்றங்களைக் கருத்தில் கொண்டு புறநகர்ப் பகுதிகளுக்கும் அடிப்படை வசதிகள் சென்று சேர்வதை நாங்கள் மாநில அளவில் உறுதி செய்து வருகின்றோம்.

இதனால் கஹாங் மக்கள் மட்டுமன்றி மற்ற பகுதிகளில் வாழும் மக்களும் குறிப்பாக இந்திய சமூகத்தினரும் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.
உதாரணமாக இணையத் தொடர்பு வசதிகள், தொலைத்தொடர்பு வசதிகள் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றடைவதை நாங்கள் உறுதி செய்து வருகின்றோம்.
இதன் மூலம் இயங்கலை (ஆன்லைன்) வழியாக பள்ளிப் பாடங்கள் பிரச்சினை இன்றி நடத்தப்படுவதை உறுதி செய்யவுள்ளோம்.


ஒருவர் புறநகர்ப் பகுதியில் வசிக்கிறார் என்பதால் அவருக்கான நவீன தொழில்நுட்ப வசதிகள் கிடைக்கக்கூடாது என்பதில்லை. இத்தகைய வசதிகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான் மாநில அரசாங்கத்தின் குறிக்கோளும் ஆகும்.இதன் மூலம் பள்ளிகளின் அடிப்படைக் கல்வி கட்டமைப்பை மேம்படுத்த முடியும். மேலும் அண்மைக் காலத்தில் வணிக நடைமுறைகள் இணையம் வழி நடத்தப்படும் சூழல் அதிகரித்துள்ளது. இதனால் பலர் இணைய வழி விற்பனை வணிகங்களில் ஈடுபட்டு வருமானத்தையும்ஈட்டி வருகின்றனர். தங்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திக் கொண்டுள்ளனர்.

எனவே, புறநகர், கிராமப் புறங்களை மின்னிலக்க மயமாக்கும் (டிஜிட்டல்) முயற்சி களை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம். இதன் மூலம் இந்திய சமூகத்தினரும் பெருமளவில் பயன்பெறுவர்.

வெள்ளத் தடுப்புத் திட்டங்கள்
அடிக்கடி வெள்ளம் ஏற்படும் பிரச்சினை தொடர்கதையாகி விடக்கூடாது என்ற நோக்கத்தோடு நிரந்தரமாக வெள்ளப் பிரச்சினைகளைத் தீர்க்கும் திட்டங்களை நான் ஆட்சிக் குழு உறுப்பினர் என்ற முறையில் முன்மொழிந்திருக்கிறேன்.
மீண்டும் தேசிய முன்னணி, மாநில அரசாங்கத்தை அமைத்து இந்தத் திட்டங்களைச் செயல்படுத்தினால் வெள்ளப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும் எனவும் நம்புகிறேன். அதேபோல, எல்லா வட்டாரங்களிலும் சாலைத் தொடர்புகள், இணைப்புகள் ஏற்படுத்தப்படுவதையும் மாநில அரசாங்கத்தின் சார்பில் நான் உறுதி செய்திருக்கிறேன்.

இந்திய சமூகத்திற்கு வேலை வாய்ப்பும் வணிக வாய்ப்புகளும்
ஆட்சிக் குழு உறுப்பினர் என்ற முறையில் ஜோகூர் மாநில இந்தியர்களுக்கு அரசாங்கச் சேவைகளில் கூடுதல் வேலை வாய்ப்புகள் பெற்றுத் தர நாங்கள் எப்போதும் முயற்சி எடுத்து வருகிறோம். ஒவ்வொரு மாவட்ட மன்றத்திலும் குறைந்தது ஐந்து இந்தியர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதை நாங்கள் கோரிக்கையாக வைத்திருக்கிறோம். மந்திரி பெசாரும் அதற்கு ஒப்புக் கொண்டுள்ளார்.

வணிக ரீதியிலும் இந்தியக் குத்தகையாளர்களுக்கு உதவ மாநில கட்டமைப்புத் திட்டங்களிலும் சாலை நிர்மாணிப்புத் திட்டங்களிலும் போதிய வாய்ப்புகள் வழங்கப்படுவதை நாங்கள் உறுதி செய்துள்ளோம்.இந்திய சமூகத்திற்கு சிறப்பு உதவி நிதியாக ஐந்து மில்லியன் ரிங்கிட்டை மாநில அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.
இதன் மூலம் இந்தியர்களுக்கான கல்வி, சமூக நலத் திட்டங்களில் நாங்கள் உதவுகிறோம்.

கைத்திறன் பயிற்சிகள், வணிக முனைவராக உதவுதல் போன்ற அம்சங்களிலும் இந்திய சமூகத்திற்கு நாங்கள் உதவி புரிந்து வருகிறோம். இவற்றில் பெரும்பாலான அம்சங்கள் 2022 மாநில அரசாங்க வரவு- செலவுத்திட்டத்தில் இடம் பெற்றிருக்கின்றன.இவற்றையெல்லாம் செயல்படுத்த தேசிய முன்னணி அரசாங்கம் மீண்டும் மாநிலத்தில் ஆட்சி அமைக்க வேண்டும். அதற்கு இந்தியர்கள் தங்களின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கக் கேட்டுக்கொள்கிறேன்.

எதிர்கால நிலைத்தன்மைக்காக அதிகாரத்தை எங்களுக்கு வழங்குங்கள் என்ற கோரிக்கையோடுதான் நாங்கள் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளோம்.

அதற்கேற்ப இந்தியர்களும் ஆதரவு தருவார்கள் என நம்புகிறேன். தேசிய முன்னணி அரசாங்கம் கடந்த காலத்தில் வழங்கியுள்ள சேவைகளையும் குறுகிய காலத்தில் மற்ற எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்தபோது, நடந்தது என்ன என்பதையும் ஒப்பிட்டுப் பார்க்குமாறு இந்தியர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.

அந்தக் கட்சிகள் ஆட்சி நடத்தும்போது ஏற்பட்ட அரசியல் மோதல்கள் காரணமாக மக்களுக்கான நன்மைகள் சென்று சேரவில்லை. அதனால்தான் நிலைத்தன்மை மிக்க அரசாங்கம் அமைய எங்களுக்கு வாக்களியுங்கள் என்ற சுலோகத்தோடு நாங்கள் பிரச்சாரம் செய்து வருகின்றோம்.

தேசிய முன்னணி அரசாங்கம் இந்திய சமூகத்தின் மீது அக்கறை கொண்ட அரசாங்கம். கல்வி, சமூகம், ஆலயங்கள், அரசு சாரா இயக்கங்கள் ஆகியவை தொடர்பில் இந்திய சமூகத்திற்கு ஏராளமான சேவைகளை நாங்கள் வழங்கியிருக்கிறோம்.

அவற்றை நினைவில் கொண்டு இந்தியர்கள் தேசிய முன்னணிக்கு வாக்களிப்பார்கள் என உறுதியாக நம்புகிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here