சீனாவிடம் டிரோன்களை கேட்கும் ரஷ்யா; ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

வாஷிங்டன், மார்ச் 15:

உக்ரைன் மீது தாக்குதலை மேலும் தீவிரப்படுத்த சீனாவிடம் டிரோன்களை ரஷ்யா கேட்டுள்ளது அமெரிக்காவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் நெருங்கிய கூட்டாளியான சீனா, உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் பைடன் அரசுக்கு, இது பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் மற்றும் சீனாவின் உயர்மட்ட ஆலோசகரும், கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினருமான யாங் ஜியேச்சி ஆகியோர் நேற்று ரோமில் சந்தித்து பேசினர்.

சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில், உக்ரைன் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த ஆலோசனை மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

வாஷிங்டனில் உள்ள சீன தூதரக அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்கா சீனா குறித்து தவறுதலான தகவல்களை வெளியிட்டு வருகிறது. உக்ரைன்-ரஷ்யா இடையே சமாதானப் பேச்சுக்களை ஊக்குவிப்பதில் நாங்கள் ஆக்கப்பூர்வமான பங்கை ஆற்றி வருகிறோம்” என்றார்.

3-வது வாரமாக தொடரும் போரை முடிவுக்கு கொண்டுவர, சீனா, ரஷ்யாவுடன் கொண்டிருக்கும் தனது செல்வாக்கை பயன்படுத்தி முயற்சிக்க வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்து வருகிறது.

மேலும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் உயர்மட்ட ஆலோசகர்கள், ரஷ்யாவின் மீது அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய, ஆசிய கூட்டணி நாடுகளால் சுமத்தப்பட்ட பொருளாதாரத் தடைகளை அமல்படுத்துமாறு, சீனாவிற்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.

ரஷ்ய அதிபர் புதின், உக்ரைனில் இரசாயன அல்லது உயிரியல் ஆயுதங்களைப் பயன்படுத்துவார் என்ற கவலையும் அமெரிக்க தரப்பினரிடம் நிலை கொண்டுள்ளது.

இந்நிலையில், ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் நிகோலாய் பட்ருஷேவை அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் அழைத்து பேச உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதில் உக்ரைன் மீது ரஷ்யா, அணு ஆயுத தாக்குதல் மற்றும் உயிரியல் ஆயுதம் போன்ற தாக்குதலை மேற்கொள்ள கூடாது என்று அமெரிக்க தரப்பில் அழுத்தமாக வலியுறுத்தப்படும் என்று தெரிகிறது.

ஆனால், உக்ரைன் மீதான ரஷ்ய படைகளின் மெதுவான முன்னேற்றத்தால் விரக்தியில் இருக்கும் புதின், ரஷ்யா மீது அமெரிக்காவும் உக்ரைனும் இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம் என்பன போன்ற போலியான தகவல்களை தெரிவித்து, இதனை காரணம் காட்டி, ரஷ்யா உயிரியல் ஆயுதங்களைப் பயன்படுத்த தயாராகி வருவதாக அமெரிக்க குற்றம் சாட்டியுள்ளது.

மேலும், “ரஷ்யா வேகமாக தயாராகி வருகிறது. உயிரியல் ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்துவதற்கு போலியான காரணமாக பிற நாடுகளின் மீது இத்தகைய குற்றச்சாட்டுகளை புதின் முன் வைத்துள்ளார். உலக நாடுகள் ரஷ்யாவின் இந்த போலியான குற்றச்சாட்டை நம்பி வீழ்ந்து விடக்கூடாது” என்றார்.

முன்னதாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இருநாட்டு பாதுகாப்பு ஆலோசகர்களும் சந்தித்து பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here