கங்கார், மார்ச் 31 :
கெத்தும் இலைகளை ஏற்றுமதி செய்யும் விஷயம் சட்ட ரீதியில் தீர்க்காத வரையில், தாய்லாந்திற்கு கெத்தும் இலைகளை ஏற்றுமதி செய்யும் திட்டம் பெர்லிஸ் அரசாங்கத்திடம் இல்லை என்று பெர்லிஸ் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அஸ்லான் மான் தெரிவித்துள்ளார்.
கெத்தும் இலைகளை விற்பதையும் பயன்படுத்துவதையும் தடைசெய்யும் சட்ட விதிகள் இன்னும் அமலில் உள்ளன. அதுமட்டுமல்லாமல், கெத்தும் இலைகளை தவறாகப் பயன்படுத்தினால், அது (இலைகளைப் பயன்படுத்துவது) சமூகத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதால், ஏற்றுமதி நோக்கங்களுக்காக எந்த முடிவும் எடுப்பதற்கு முன், கவனமாக திட்டமிடல் மற்றும் அதற்கான தீர்வுகளை விரிவாகக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
“நாங்கள் முதலில் சட்ட சிக்கல்களை தீர்க்க வேண்டும், ஏனெனில் இது தீர்க்கப்படாத வரை, எங்களால் கெத்தும் இலைகளை விற்கவோ அல்லது கெத்தும் மரங்களை நடவோ முடியாது.
இன்று பெர்லிஸ் மாநில சட்டசபைக்கு வெளியே நிருபர்களிடம் பேசிய அவர், எது செயல்படுத்தப்பட வேண்டுமோ அதை அனுமதிக்கும் சட்டம் செயல்பாட்டிலிருக்க வேண்டும் என்றார்.
பெர்லிஸின் அண்டை மாநிலமான கெடா, போதைப்பொருள் பண்புகளைக் கொண்ட கெத்தும் இலைகளை தாய்லாந்திற்கு மருத்துவப் பயன்பாட்டிற்காக ஏற்றுமதி செய்ய அனுமதிக்குமாறு மத்திய அரசிடம் முன்மொழிந்துள்ளது.
இதற்கிடையில், கெத்தும் இலைகளை ஏற்றுமதி செய்வது சட்டப்பூர்வமாக்கப்பட்டால், இரப்பர் சிறு தோட்டக்காரர்கள் கெத்தும் மரத்தை வளர்ப்பதன் மூலம் கூடுதல் வருமானம் ஈட்டுவது குற்றமாகாது என்று ஊரக வளர்ச்சி அமைச்சர் டத்தோஸ்ரீ மஹ்ட்சிர் காலிட் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.










