மக்களவையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை குரங்குகள் மற்றும் தவளைகளாக சித்தரிக்கும் ஓவியம் இஸ்லாமிய போதனைகளுக்கு எதிரானது என முன்னாள் சமய விவகார அமைச்சர் முஜாஹித் யூசுப் ராவா தெரிவித்துள்ளார்.
ஒரு இஸ்லாமியர் என்ற முறையில், குர்ஆன் மக்களைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவதையும் இழிவாகப் பார்ப்பதையும் தடைசெய்துள்ளதால், இதுபோன்ற அரசியல் நையாண்டிகளுக்கு எதிரானவன் என்று அவர் கூறினார்.
இதுபோன்ற செயல்களுக்கு முடிவு கட்டாதவர்களை அல்லாஹ் கொடூரமானவர்கள் என்று முத்திரை குத்துவார் என்று பாரிட் புந்தார் நாடாளுமன்ற உறுப்பினரான அவர் தெரிவித்தார். எந்த வடிவத்திலும் நையாண்டி செய்வது இஸ்லாமிய நெறிமுறைகளை மதிக்க வேண்டும் என்று அவர் முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராபுதின் இத்ரிஸ் ஷா இந்த ஓவியத்தை வாங்கியதாகவும், அதை ஏலம் விடுவதாகவும், அதில் கிடைக்கும் தொகையை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்க இருப்பதாகவும் வெளியான செய்திகளுக்கு பதிலளிக்கும் விதமாக முஜாஹித் இவ்வாறு கூறினார்.
அமானா துணைத் தலைவரான முஜாஹித், கலைஞர் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரங்குகளாக சித்தரித்து எல்லை மீறிச் சென்றுவிட்டார் என்று கூறினார்.