கோத்தா பாரு, ஏப்ரல் 25 :
கடந்த வெள்ளிக்கிழமை, இங்குள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் சண்டையில் ஈடுபட்ட ஏழு சந்தேக நபர்களில் ஆறு பேரின் விளக்கமறியல் புதன்கிழமை வரை இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
ஆறு சந்தேக நபர்களும் 24 முதல் 30 வயதுடையவர்கள் என்று கோத்தா பாரு மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் முகமட் ரோஸ்டி டாட் கூறினார்.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 148 இன் விசாரணைக்கு உதவுவதற்காக 6 சந்தேக நபர்களும் இன்று வரை மூன்று நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 19 வயதுடைய சந்தேகநபரின் விளக்கமறியல் விண்ணப்பம் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.
ஏப்ரல் 22ஆம் தேதி இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், தொலைத்தொடர்பு உபகரணக் கடையொன்றின் ஊழியர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு, பொதுமக்களால் பதிவு செய்யப்பட்ட ஏழு, 27 மற்றும் 31 வினாடிகள் நீடிக்கும் மூன்று வீடியோ கிளிப்புகள் மூலம் சமூக ஊடகங்களில் பரவியது.
ஏழு சந்தேக நபர்களில் ஐந்து பேர் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் வழக்குகள் தொடர்பான முந்தைய பதிவுகளைக் கொண்டிருப்பதையும் நாம் கண்டறிந்துள்ளோம் என்றார்.