‘இனி நான் மட்டும்தான் பாஸ்’ – ரூ.3.30 லட்சம் கோடிக்கு ட்விட்டர் டீலை ஓகே செய்த எலான் மஸ்க்

ட்விட்டர் நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு எலான் மஸ்க் வாங்கியுள்ளார். இந்திய ரூபாயின் மதிப்பின் படி இந்த தொகை மூன்று லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாயாகும். இதன் மூலம் ட்விட்டர் நிறுவனத்தின் முழு உரிமையாளராகவும், ஒரே உரிமையாளராகவும் எலான் மஸ்க் மாறியுள்ளார்.

டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓவான எலான் மஸ்க் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி ட்விட்டர் நிறுவனத்தை முழுமையாக வாங்க விரும்புகிறேன் என அறிவித்தார். எலான் மஸ்க்கின் இந்த அதிரடி அறிவிப்பால் மிரண்டு போன ட்விட்டர் நிறுவனமும் அதன் பங்குதாரர்களும் ‘பாய்சன் பில்’என்ற அனுகுமுறையை பயன்படுத்தி எலான் மஸ்கை கட்டுப்படுத்த பார்த்தனர்.அதாவது எலான் மஸ்க்கை வாங்கவிடாமல் தடுக்க எலான் மஸ்கின் பங்குகளின் விலையை அதிகரித்தும், மற்றவர்களுக்கு பங்கு விலையை குறைக்கவும் அந்நிறுவனம் முயன்றது. ஆனால் மொத்த தொகையான 44 பில்லியன் டாலரை உரிய முறையில் உடனடியாக கொடுக்க தயார் என எலான் மஸ்க் தெரிவித்ததாகவும், இதற்காக மற்ற பங்குதாரர்களிடம் தனிப்பட்ட முறையில் எலான் மஸ்க் பேசி அவர்களை சம்மதிக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று எலான் மஸ்க்கின் ஆபரை ட்விட்டர் நிறுவனம் ஏற்றுக்கொண்டதாகவும் இதையடுத்து ட்விட்டர் நிறுவனத்தின் ஒரே முதலாளியாகவும் எலான் மஸ்க் மாறியுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியானது. கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கியதன் மூலம் ட்விட்டர் நிறுவனத்திற்குள் என்ட்ரி ஆனார் எலான் மஸ்க். ட்விட்டர் நிறுவன சிஇஓ பிராக் அகர்வால் அடுத்த நாளே ஏப்ரல் 5, நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் இணைய எலான் மஸ்க்கிற்கு அழைப்பு விடுத்தார்.

ஆனால், தனக்கு இதில் விருப்பம் இல்லை என எலான் மஸ்க் அறிவத்தார். இதைத்தொடர்ந்து எலான் மஸ்க் ட்விட்டர் குறித்து பல்வேறு அதிரடி கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருந்தார். ட்விட்டரில் எடிட் பட்டன் கொண்டு வரலாமா, முன்னணி ட்விட்டர் பிரபலங்கள் நீண்ட நாள்கள் தங்களின் அக்கவுன்டை பயன்படுத்தவில்லையே போன்ற எலான் மஸ்க்கின் ட்வீட்கள் விவாதப் பொருளாகியுள்ளன.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக ஏப்ரல் 14ஆம் தேதி ட்விட்டர் நிறுவனத்தை முழுமையாக வாங்க விரும்புவதாக எலான் மஸ்க் அறிவித்தார். நேற்று இந்த டீல் ஓகே ஆன நிலையில், பேச்சு சுதந்திரத்தை ட்விட்டரில் அமல்படுத்தப்போவதாக எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார். “என்னை மிக மோசமாக விமர்சிப்பவர்களும் ட்விட்டரில் இருப்பதையே நான் விரும்புகிறேன், காரணம் அதுதான் உண்மையான கருத்து சுதந்திரம்” என எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார்.

எலான் மஸ்க்கின் இந்த ட்வீட் தற்போது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கானது கடந்த வருடம் முடக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய, வன்முறையை தூண்டும் விதமான கருத்துக்களை பதிவிட்ட குற்றச்சாட்டில் ட்ரம்ப்பின் கருத்து முடக்கப்பட்ட நிலையில்,ட்விட்டரின் புதிய ஓனர் எலான் மஸ்க் கருத்து சுதந்திரம் தான் ட்விட்டரின் அடிப்படை என தற்போது கூறியுள்ளார்.எனவே, ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவருவார்களாக என ட்விட்டர் வாசிகள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here