கடப்பிதழ் விண்ணப்பம் மற்றும் புதுப்பித்தல்களுக்கு முன்பதிவு தேவையில்லை ; குடிநுழைவுத்துறை அலுவலகம் செயல்படும் நேரம் நீட்டிப்பு

புத்ராஜெயா, ஏப்ரல் 29 :

மலேசிய அனைத்துலக கடப்பிதழுக்கான (PMA) விண்ணப்பம் மற்றும் புதுப்பித்தல் தொடர்பான சிக்கல்களைச் சமாளிக்க கடப்பிதழ் வழங்கும் அலுவலகங்கள் மற்றும் கவுன்டர்களின் செயல்பாட்டு நேரத்தை நீட்டிக்கும் என்றும், இதுவரை நடைமுறையிலிருந்த இணையவழி முன்பதிவு பெறும் முறையை (STO)  அகற்றுவதாகவும்  குடிநுழைவுத்துறை இயக்குநர் ஜெனரல் டத்தோஸ்ரீ கைருல் டிசைமி டாட் தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூர், சிலாங்கூர், ஜோகூர் பாரு, நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா ஆகிய இடங்களுக்கு மே 16ஆம் தேதி முதலும் கிள்ளான் பள்ளத்தாக்கிற்கு வெளியே உள்ள அனைத்து கடப்பிதழ் வழங்கும் அலுவலகங்களுக்கு மே 9ஆம் தேதி முதலும் இணையம் மூலம் முன்பதிவு பெறும் முறைமை ரத்துச் செய்யப்படும் என்று கூறினார்.

“மே 16ஆம் தேதிக்கு பின்னர் இணையம் (STO) மூலம் சந்திப்பு தேதியைப் பெற்றவர்கள், கொடுக்கப்பட்ட தேதியைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை” என்று அவர் இன்று (ஏப்ரல் 29) வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும், கோலாலம்பூர், சிலாங்கூர், புத்ராஜெயா, ஜோகூர் பாரு, நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா ஆகிய இடங்களில் உள்ள அனைத்து பாஸ்போர்ட் வழங்கும் அலுவலகங்களும் மே 14 முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 8 மணி முதல் நண்பகல் 1 மணி வரையம் செயல்படும் என்றும் கைருல் டிசைமி அறிவித்தார்.

இது தவிர, மே 16ஆம் தேதி முதல் கோலாலம்பூர், சிலாங்கூர் மற்றும் ஜோகூர் பாருவில் உள்ள UTC குடிவரவு கவுன்டர்களின் இயக்க நேரம் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 1 முதல் நாட்டின் எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து பாஸ்போர்ட் விண்ணப்பம் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றின் தொடர்ச்சியான அதிகரிப்பு காரணமாகவும், மலேசியர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டும் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதாக கைருல் டிசைமி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here