ஜார்ஜ் டவுன், மே 8 :
இன்று அதிகாலை இங்குள்ள பாயான் லெப்பாஸில் உள்ள துன் டாக்டர் லிம் சோங் யூ நெடுஞ்சாலையை ஒட்டிய சீகேட் கடற்கரை பகுதியில் நடத்தப்பட்ட நடவடிக்கையின் போது, அபாயகரமான சாகசம் மற்றும் பந்தயத்தில் ஈடுபட்டதற்காக மொத்தம் 50 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டனர்.
சட்டவிரோத பந்தயத்திற்காகவும், வார இறுதி நாட்களில் இரவில் ‘சூப்பர்மேன் ‘ போன்ற சாகச சவாரிகளுக்காகவும் அடிக்கடி கூடும் குழுவினர், நள்ளிரவில் தொடங்கிய நடவடிக்கையில் காவல்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டனர்.
இந்த நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய பினாங்கு போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை தலைவர், சஜாஃப்ரி சுல்கப்லி கூறுகையில், அனைத்து மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் வேகமாக தப்பிச் செல்ல முயன்றனர், ஆனால்பத்து மாவுங்கிலிருந்து நகர மையத்திற்குச் செல்லும் பாதை காவல்துறையால் சுற்றி வளைக்கப்பட்டதால் தப்பிக்கும் முயற்சி தோல்வியடைந்ததாக கூறினார்.
“இப்பகுதியில் அடிக்கடி ஆபத்தான சவாரிகளை நிகழ்த்தியும் அதிக சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள் ஓட்டிகளின் செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்களின் முறைப்பாடுகளை அடுத்து போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்” என அவர் இன்று தொடர்புகொண்ட போது தெரிவித்தார்.
ஜாஃப்ரியின் கூற்றுப்படி, 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் அடங்கிய 50 ஆண்களை போலீசார் தடுத்து வைத்துள்ளனர், அதே நேரத்தில் 50 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இரண்டு கார்களை பறிமுதல் செய்தனர் அத்தோடு அந்நடவடிக்கையின்போது பல்வேறு குற்றங்களுக்காக மொத்தம் 150 சம்மன்களை விதிக்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட நபர்கள் அனைவரும் பாயான் லெப்பாஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
சீகேட் கடற்கரை பகுதி அதன் நீண்ட மற்றும் நேரான பாதையின் காரணமாக ‘மேட் ரிம்பிட்’ நடவடிக்கைகளுக்கான பிரதான இடமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.