இந்த மாதத்தில் மட்டும், நான்கு பேர் பினாங்கு பாலத்தில் இருந்து விழுந்துள்ளனர்

ஜார்ஜ்டவுன், மே 10 :

இன்று காலை பினாங்கு பாலத்தில் இருந்து ஒருவர் விழுந்த சம்பவத்துடன் சேர்த்து, இந்த மாதத்தின் முதல் 10 நாட்களில் பதிவான நான்காவது சம்பவம் இதுவாகும். மேலும் கடந்த ஜனவரியில் இருந்து இது எட்டாவது சம்பவம் என்பது மிக கவலைக்குரிய விஷயமாகும்.

இன்று நடந்த சம்பவத்தில், இங்கு அருகிலுள்ள ஆயிர் ஈத்தாமிலுள்ள பாயா தேருபோங்கைச் சேர்ந்த மூத்த குடிமகன் லாவ் சூன் சை, 66, என்பவரே பாலத்திலிருந்து விழுந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டது.

சம்பவ இடத்திலிருந்து சிறிது தூரத்தில், பாதிக்கப்பட்டவர் ஓட்டிச் சென்ற பாலத்தின் மீது வெள்ளி நிற பெரோடுவா கான்சில் கார் இருந்தது.

தீவிற்கு செல்லும் வழியில் பிறையை நோக்கிய கிலோமீட்டர் 4.0 இல் கடலில் விழுந்து பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசிய கடல்சார் அமலாக்க முகமை துறையின் (Maritim Malaysia) பினாங்கு இயக்குநர், கேப்டன் அப்துல் ரசாக் முகமட்டின் கூற்றுப்படி , அவரது துறைக்கு சம்பவம் தொடர்பில் இன்று காலை 7.07 மணிக்கு மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையிலிருந்து அழைப்பு வந்தது.

இந்த சம்பவம் குறித்த தகவல் நேரடியாக கடல்சார் மீட்பு துணை மையத்திற்கு (MRSC) லங்காவியில் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை (CARILAMAT) செயல்படுத்துவதற்காக அனுப்பப்பட்டது.

அதைத் தொடர்ந்து பெர்காசா 1221 என்ற படகு சம்பவ இடத்துக்குச் சென்று தேடுதல் வேட்டை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

“காலை 8 மணிக்கு CARILAMAT நடவடிக்கை செயல்படுத்தப்பட்டது மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, மலேசிய குடிமைத் தற்காப்புப் படை மற்றும் பத்து உபான் மரைன் போலீஸ் படை ஆகியனவும் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன , ”என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறினார்.

தேடுதல் இன்னும் தொடர்கிறது என்றும் இது சம்பந்தமாக, கடலில் ஏதேனும் கண்டுபிடிப்புகள் மற்றும் அவசரநிலைகள் அல்லது விபத்துகள் ஏற்பட்டால் 24 மணி நேர MERS 999 அவசரநிலைப் பாதையில் அல்லது பினாங்கு கடல்சார் செயல்பாட்டு மையத்தில் 04-2626146 என்ற எண்ணில் தெரிவிக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here