ஜெலேபு, மே 22 :
கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் லாபுவான் உள்ளிட்ட பகுதிகளில் உரிமமின்றி வணிகம் செய்யும் வெளிநாட்டு நபர்கள் மீது, அமலாக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டாட்சி பிரதேசங்களின் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஜலாலுடின் அலியாஸ் தெரிவித்தார்.
அதாவது மூன்று கூட்டாட்சி பிரதேசங்கள் வழங்கியுள்ள வளாகங்களில் உரிமம் பெற்ற உள்ளூர் வர்த்தகர்கள் மட்டுமே வணிகம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள் என்றார்.
உள்ளூர் மக்களைத் தவிர ஏனைய வணிகர்கள் வியாபாரம் செய்வதை தவிர்க்க கோலாலம்பூர் மாநகர சபை (DBKL) போன்ற தொடர்புடைய துறையினர் தொடர்ந்து அமலாக்கத்தை மேற்கொள்வார்கள் என்று அவர் கூறினார்.
“இந்த நேரத்தில் அமலாக்க அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்வதால், தகுந்த நடவடிக்கை விரைவில் அல்லது பின்னர் மேற்கொள்ளப்படும் என்பதை நான் அவர்களுக்கு நினைவூட்டுகிறேன் என்றார்.
மேலும் ”மூன்றாம் தரப்பினருக்கு வணிக உரிமம் அல்லது வளாகத்தை வாடகைக்கு வழங்கும் தனிநபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று, நேற்றிரவு ஜெலேபு அம்னோ வளாகத்தில் உள்ள ஜெலேபு நாடாளுமன்றத்தின் அய்டில்ஃபித்ரி திறந்த இல்ல உப்பரிப்பில் சந்தித்தபோது கூறினார்.
சம்பந்தப்பட்ட வெளிநாட்டு வர்த்தகர்கள் உட்பட இந்த வளாகத்தை வாடகைக்கு எடுத்த தரப்பினரிடம் எந்த சமரசமும் செய்யப்பட மாட்டாது என்றார்.
பிரச்சனையைத் தீர்ப்பதற்கான அமலாக்கம் கோலாலம்பூரில் மட்டுமல்ல, புத்ராஜெயா மற்றும் லாபுவானையும் உள்ளடக்கியதாக தொடர்ந்து நடைபெறும் என்று ஜெலேபு நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.
இதற்கிடையில், இரவு 7.30 மணி முதல் 11 மணி வரை நடைபெற்ற இந்த திறந்த இல்லத்தில் 10,000 குடியிருப்பாளர்கள், குறிப்பாக ஜெலேபு நாடாளுமன்றத் தொகுதியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.