குரூண், மே 31 :
சாலைத் தடுப்பில் சந்தேகத்திற்கிடமாக காணப்பட்ட லோரி ஒன்றை சோதனை செய்ததில், நாட்டின் தென்பகுதிக்கு அனுப்பப்பட்டதாக நம்பப்படும் 1.35 டன் எடையுள்ள 135 பிளாஸ்டிக் பொட்டலங்கள் கொண்ட கெத்தும் இலைகளை போலீசார் பறிமுதல் செய்ததுடன், உள்ளூர்காரர்களான லோரியின் ஓட்டுநர் மற்றும் உதவியாளரையும் கைது செய்துள்ளனர்.
கெடா போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை தலைவர், கண்காணிப்பாளர் முகமட் மஹிரி ஹுசின் கூறுகையில், இரவு 11.30 மணிக்கு நடந்த ஆய்வின் போது, போலீசாரால் கைப்பற்றப்பட்ட கெத்தும் இலைகளின் மதிப்பு சுமார் RM16,200 என மதிப்பிடப்பட்டுள்ளது என்றார்.
“நாட்டின் தென்பகுதியில் கெத்தும் இலைகளுக்கு அதிக கேள்வி இருப்பதால், ஜோகூரில் உள்ள குளுவாங்கிற்கு அனுப்புவதற்காக போக்கோக் சேனாவிலிருந்து இவ்விலைகள் கொண்டு வரப்பட்டதாக நம்பப்படுகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட ஒவ்வொரு பிளாஸ்டிக் பொட்டலத்திலும் 10 கிலோகிராம் கெத்தும் இலைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்றும், சம்பந்தப்பட்ட லோரியின் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் ஆகியோர் ஜோகூர் பாருவை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையின் முடிவுகளில் கண்டறியப்பட்டது என்றும் முகமட் மஹிரி கூறினார்.
இந்த வழக்கு விஷம் சட்டம் 1952 பிரிவு 30 (3)ன் கீழ் விசாரிக்கப்பட்டது என்றார்.