தாமான் மேகாவில் 300,000 வெள்ளிக்கும் அதிகமான மதிப்புள்ள சட்டவிரோத சிகரெட்டுகள் பறிமுதல்; உள்ளூர் ஆடவர் ஒருவர் கைது

சிரம்பான், ஜூன் 1 :

இங்குள்ள தாமான் மேகாவிலுள்ள ஒரு வளாகத்தில், இன்று அதிகாலை நடந்த சோதனையில், 300,000 வெள்ளிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு பிராண்டுகள் கொண்ட சட்டவிரோத சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

காலை 4.45 மணிக்கு தொடங்கிய Op Kontraban என்ற குறியீட்டு பெயர்கொண்ட நடவடிக்கையில், பட்டாலியன் 6 PGA, மூவாரைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் குழுவால் இந்த சோதனை நடத்தப்பட்டது.

பட்டாலியன் 6 PGA இன் கட்டளை அதிகாரி, கண்காணிப்பாளர் ரஸ்டி அரிஃபின் கூறுகையில், இந்த சோதனையில், “தோயோத்தா அன்சார் மற்றும் ஹூண்டாய் ஆகிய இரண்டு வாகனங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் முடிவுகளில், பல்வேறு வகையான கடத்தல் (சட்டவிரோத) சிகரெட்டுகள் அடங்கிய பல பழுப்பு நிற பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இக்குற்றச்சாட்டுகளின் பேரில், ஒரு உள்ளூர் ஆடவரும் கைது செய்யப்பட்டார்,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், இச்சிகரெட்டுகள் விநியோகிக்கப்படுவதற்கு முன்பு, அவற்றை சேமித்து வைக்கும் கடையாக அவ்வளாகம் பயன்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.

கைப்பற்றப்பட்ட சட்டவிரோத சிகரெட்டுகளின் மொத்த மதிப்பு RM 318,738 ஆகும்.

“இந்த வழக்கு சுங்கச் சட்டம் 1967 இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது, மேலும் சந்தேக நபர் விசாரணைக்கு உதவுவதற்காக தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here