கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்ட பெண் தொடர்பில், அவரது காதலரிடம் போலீசார் விசாரணை

ஈப்போ, ஜூன் 2 :

கோல கங்சார் ஆற்றங்கரையில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட, கொலை செய்யப்பட்டவர் என நம்பப்படும் 21 வயது பெண்ணின் காதலரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் உதவுவதற்காக புதன்கிழமை (ஜூன் 1) மாலை அவரின் காதலனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்ததாக, பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோ மியோர் ஃபரிடலாத்ராஷ் வாஹிட் கூறினார்.

“இவ்வழக்கு தொடர்பில் இன்னும் விசாரணை நடந்து கொண்டிருப்பதால், அவர் சந்தேக நபரா அல்லது அவருக்கும் இக்கொலைக்கும் சம்பந்தம் இல்லையா என்பது குறித்து எங்களுக்கு இன்னும் தெரியவில்லை என்றார்.

“பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியானதும், பாதிக்கப்பட்டவர் அதிகாரப்பூர்வமாக அடையாளம் காணப்படுவார் என்றும் சரியான நேரத்தில் இதுதொடர்பான மேலதிக விவரங்கள் பகிரப்படும்,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும், பிரேத பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகும் என்றநிலையில், இதுவரை இவ்வழக்கு தொடர்பில் யாரும் கைது செய்யப்படவில்லை என்று மியோர் தெரிவித்தார்.

‘இறப்பிற்கான காரணத்தை நாங்கள் கண்டறிய வேண்டும், இறந்தவரின் தந்தையின் டிஎன்ஏ மாதிரியைப் பொருத்த வேண்டும், அத்துடன் பாதிக்கப்படடவரின் பல் மாதிரிகள் அவர் முன்பு சிகிச்சை பெற்ற பல் மருத்துவ மனையில் உள்ள பதிவுகளுடன் பொருத்த வேண்டும் இவ்வாறு பல விஷயங்கள் இன்னும் உள்ளன .

“பாதிக்கப்பட்ட பெண் கர்ப்பமாக இருப்பதாக வதந்திகள் உட்பட பல ஊகங்கள் சுற்றி வருகின்றன.

“பிரேத பரிசோதனை முடிவுகள் மட்டுமே அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கும், எனவே நாங்கள் பொறுமையாக இருக்க வேண்டும் மற்றும் நிபுணர்கள் தங்கள் கடமையை செய்ய அனுமதிக்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.

காதலனின் வயது, பாதிக்கப்பட்டவரின் தொழில், என்ன நடந்தது என்பது குறித்து உரிய நேரத்தில் பதில் அளிக்கப்படும் என்றார்.

செவ்வாய்க்கிழமை (மே 31) முதல் காணாமல் போன தனது 21 வயது சகோதரியின் எரிந்த உடலை அடையாளம் காண, 19 வயது இளைஞன் முன் வந்ததாக நேற்று மியோர் தெரிவித்திருந்தார்.

சகோதரியின் செருப்புகள், ஹேர் கிளிப் மற்றும் மூக்குக்தி ஆகியவற்றின் அடிப்படையில் தனது சகோதரியை சகோதரர் அடையாளம் கண்டதாக அவர் கூறினார்.

செவ்வாய்கிழமை கம்போங் தாலாங் உலு அருகேயுள்ள ஆற்றங்கரையில் பிற்பகல் 3 மணியளவில் சடலம் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here