கோலாலம்பூர், ஜூன் 5 :
செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் மீண்டும் செயல்பட்டதற்காக, டாமன்சாரா உத்தாமாவில் உள்ள ஒரு இரவு விடுதியில் நேற்று (ஜூன் 4) போலீசார் சோதனை நடத்தினர்.
சனிக்கிழமை நள்ளிரவு 1.30 மணியளவில், உரிமம் இல்லாமல் இரவு விடுதி இயங்குவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை நடத்தியதாக பெட்டாலிங் ஜெயா காவல்துறை தலைவர், துணை ஆணையர் முகமட் ஃபக்ருதீன் அப்துல் ஹமீட் தெரிவித்தார்.
“நாங்கள் அங்கு 70 ஆண்களையும் 34 பெண்களையும் சோதனையிட்டோம், அவர்களில் எவரும் எந்த குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை அல்லது அவர்கள் முன்னர் தேடப்பட்ட பதிவுகளும் இல்லை என்பதை நாம் கண்டறிந்தோம்” என்றார்.
“அதனைத்தொடர்ந்து பொழுதுபோக்கு மையத்தின் உரிமம் தொடர்பான சோதனையில், அது செல்லுபடியாகும் உரிமம் இன்றி இயங்கியது கண்டறியப்பட்டது,” என்று அவர் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 5) வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சோதனையின்போது அங்கு பயன்படுத்தப்பட்ட இசைக்கருவிகளை போலீசார் கைப்பற்றினர் . மேலும்
சிலாங்கூர் பொழுதுபோக்கு மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் சட்டத்தின் பிரிவு 6(1) இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது என்றும் கடந்த ஆண்டு இந்த வளாகத்தில் பல முறை சோதனை நடத்தப்பட்டது என்றும் முகமட் ஃபக்ருதீன் கூறினார்.
குறித்த வளாகத்திற்கு எதிராக “சரியான பொழுதுபோக்கு உரிமம் இல்லாமல் இயங்கியதற்காகவும், மதுபானங்களை விற்க அனுமதி பெறாததற்காகவும், அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் செயல்படுவதற்காகவும் நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்,” என்று அவர் கூறினார்.
இதே போன்ற நடவடிக்கைகள் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் சிலாங்கூர் காவல்துறையின் ஹாட்லைனை 03-2052 9999 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.