சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு நிதியமைச்சு முன்னுரிமை; அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஸஃப்ருல் வலியுறுத்தல்

குழந்தைகளின் நீண்ட கால அடிப்படையிலான எதிர்காலத்திற்காகச் சிறந்த செயல்திட்டங்களை நாம் கொண்டிருக்க வேண்டும் என்று நிதியமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஸஃப்ருல் தெங்கு அப்துல் அஸிஸ் கூறியிருக்கிறார். குறுகிய கால நன்மைகளுக்காகவும் நீண்ட கால நன்மைகளுக்காகவும் பொதுவாகச் சமுதாயத்தினர் எப்போதும் போராடி வருகின்றனர். ஆனால் அதேசமயம் எதிர்கால நலனுக்காக மக்கள் இப்போதே செயல்பட வேண்டும் என அவர்களை நம்பச் செய்வது அவ்வளவு எளிதான காரியமல்ல எனவும் அவர் சொன்னார்.

கோவிட்-19 நெருக்கடி காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. 60 லட்சத்திற்கும் அதிகமான உயிர்களை அது காவு வாங்கியது. 50 கோடி மக்கள் பாதிக்கப்பட்டனர். பொருளாதார ரீதியாகவும் இந்த நெருக்கடி நிறைய பாதிப்புகளைக் கொண்டுவந்தது. மலேசியா உட்பட உலகம் முழுமையும் உள்ள நாடுகள் இந்தப் பாதிப்பை எதிர்நோக்கிய வேளையில் அந்நாடுகளின் அரசாங்கங்கள் மக்களுக்காகக் குறுகிய கால நிவாரணத் திட்டங்களில் கவனம் செலுத்தின.

குறிப்பாக ஏழை மக்களுக்கும் வசதி குறைந்தவர்களுக்கும் உதவக்கூடிய நிவாரணத் திட்டங்களில் மலேசியா உள்ளிட்ட நாடுகள் கவனம் செலுத்தியதாக நிதியமைச்சர் குறிப்பிட்டார். மலேசியாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ 8 தேசியப் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களும் நிதியுதவித் திட்டங்களும் கொண்டுவரப்பட்டன. இவை 530 பில்லியன் ரிங்கிட் மதிப்பைக் கொண்டவை.
32 மில்லியன் மலேசியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி போடும் திட்டமும் மேற்கொள்ளப்பட்டது. அதேசமயம் நீண்ட காலப் பொருளாதாரத் திட்டங்கள் சிலவற்றை அரசாங்கம் இடைக்காலமாகத் தள்ளிவைத்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

2020ஆம் ஆண்டு தொடங்கி நிதியமைச்சு சங்மூகப் பொருளாதாரக் கட்டமைப்புகள் மீது முழு கவனம் செலுத்தியது. நம்முடைய மக்களும் வர்த்தகத் தொழில்துறைகளும் மீண்டும் வலுப்பெற வேண்டும் என்பதற்காகவும் இன்னொரு நெருக்கடியை எதிர்நோக்கக்கூடாது என்பதற்காகவும் இவ்வாறு செய்யப்பட்டது.

சிறந்த பொருளாதார, நிதித் திட்டங்களின்றி நம்முடைய மக்கள் மீட்சிபெறுவதற்கு உதவ முடியாமல் போய்விடும் என்பதை அரசாங்கம் நன்கு உணர்ந்திருந்ததாகவும் அவர் சொன்னார். ஆக்கப்பூர்வ அணுகுமுறை, பொறுப்புணர்வுமிக்க அணுகுமுறை, சீர்திருத்த அணுகுமுறை ஆகிய மூன்று முக்கியக் கோட்பாடுகள் அடிப்படையில் நிதியமைச்சு முடிவுகளை எடுத்தது.

சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை விரிவுபடுத்தும் நமது கொள்கைகள் சிறந்த முன்னுதாரணமாகவும் திகழ்கின்றன. தனித்து வாழும் தாய்மார்கள், சுயதொழிலில் ஈடுபடுவோர் போன்ற உதவித் தேவைப்படும் மக்களுக்குச் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இபிஎப் எனப்படும் ஊழியர் சேமநிதி வாரியம், சொக்சோ எனப்படும் சமூகப் பாதுகாப்பு இயக்கம் ஆகியவற்றின் வாயிலாக குடும்ப மாதர்களுக்கும் விதவைகளுக்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை விரிவுபடுத்த அரசாங்கம் இவ்வாண்டு பட்ஜெட்டில் 80 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவர்களை உடல் செயலிழப்பு, நோய் தாக்குதல், முதுமை போன்ற பாதிப்புகளின்போது பாதுகாப்பதற்கு இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது என்று அவர் மேலும் சொன்னார். மக்களின் எதிர்கால நலனுக்காக இந்த நடப்புத் திட்டங்களைக் கொண்டுவர அரசு முடிவெடுத்தது என்றும் அவர் சொன்னார். 2020 தொடங்கி 2021 வரையில் நேரடி ரொக்கப் பண உதவியை நாங்கள் வழங்கியபோது முடிந்தளவு பி40, எம்40 தரப்பு மக்களை எங்களால் பதிவுசெய்ய முடிந்தது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதற்காக எச்ஆர்டி கார்ப்பரேஷன், தொழில்திறன் ஆற்றல் திட்டங்களையும் மேற்கொண்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மக்களுக்கு இன்னும் சிறந்த முறையிலான உதவிகளை வழங்குவதில் நிதியமைச்சு எப்போதும் கவனம் செலுத்தி வருகின்றது என்றும் நிதியமைச்சர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here