போதைபொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த மூவர் கைது; RM120,000 மதிப்புள்ள ஹெரோயின் பறிமுதல்

ஜார்ஜ் டவுன், ஜூன் 18 :

நிபோங் தெபாலில் போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டதுடன், RM120,000 மதிப்புள்ள ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டது.

பினாங்கு போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர், துணை ஆணையர் முகமட் ஷுகைரி அப்துல் சபே கூறுகையில், புதன்கிழமை மாலை 3.50 மணிக்கு ஜாலான் பெசார் நிபோங் தெபாலில் ஃபோக்ஸ்வேகன் பாஸாட்டில் பயணித்த முதல் சந்தேக நபரை போலீசார் கண்டுபிடித்தனர்.

“காரை நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டபோது, ​​​​அவர் காரை நிறுத்தாது அதன் வேகத்தை அதிகரித்தார், இதன் விளைவாக போலீசார் அவரைப் பின்தொடர்ந்தனர். அப்போது அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடதுபுறம் 200 மீட்டர் தொலைவில் மோதியது.

“அதனைத் தொடர்ந்து அந்த 36 வயதான ஓட்டுநரை கைது செய்ததுடன் அக்காருக்குள் RM120,000 மதிப்புள்ள 9,030 கிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டது,” என்று அவர் நேற்று நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், பேராக்கின் கோலா குராவ் நகரில் 53 வயதுடைய கோழி வளர்ப்பவர் ஒருவரை மாலை 4.45 மணிக்கும், நிபோங் தெபாலில் உள்ள 34 வயதான மீனவரை இரவு 10.45 மணிக்கும் கைது செய்தனர், ஆனால் அவர்களிடமிருந்து போதைப்பொருள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

“குறித்த மூவரும் இந்த ஆண்டு ஜனவரி முதல் பினாங்கு மற்றும் பேராக்கில் செயல்படும் ஹெரோயின் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் ஒவ்வொரு மாதமும் நூறாயிரக்கணக்கான லாபத்தை ஈட்டினார்கள்,” என்றும் அவர் மேலும் கூறினார்.

அவர்களிடமிருந்து ரொக்கமாக RM50,000 பணம் மற்றும் RM80,000 மதிப்புள்ள ஒரு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

அவர்கள் மூவரும் போதைப்பொருள் பரிசோதனையில் நேர்மறையை பதிவு செய்ததாகவும், அவர்களுக்கு ஏற்கனவே போதைப்பொருள் தொடர்பான குற்றப் பதிவுகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

சந்தேக நபர்கள் மூவரும் விசாரணைகளுக்காக அவர்கள் ஜூன் 22ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here