இன்று உலக தந்தையர் தினம்… அப்பா… என் முதல் ஹீரோ…. எனக்கு கல்வி தந்த ஆசான்… என் கனவிலும் நினைவிலும் வாழும் ஜீவன்…
ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை உலக தந்தையர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தந்தையர்களை கவுரவிக்கும் வகையில் கொண்டாடப்படும் இந்நாள் உலகின் 52 நாடுகளில் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையிலும, பல நாடுகளில் வெவ்வேறு தினங்களிலும் கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது.
வாஷிங்டனைச் சேர்ந்த சோனோரா ஸ்மார்ட் டோட் என்பவர் 1909 ஆம் ஆண்டில் விடுமுறை நாளான ஒரு ஞாயிற்றுக் கிழமையில் ஸ்போக்கனில் உள்ள சென்ட்ரல் மெத்தோடிஸ்ட் எபிஸ்கோபால் தேவாலயத்தில் அன்னையர் தினம் சமய போதனையைக் கேட்டுக் கொண்டிருந்த போது, தந்தையர் தினம் குறித்த யோசனை தோன்றியதாகவும், அதையடுத்து, ஜூன் 19, 1910 ஞாயிற்றுக்கிழமை அன்று அவருடைய தந்தைக்காக தேவாலயத்தை ஒரு புகழுரையை ஏற்பாடு செய்தார். அதன்முதலே அதிகார்வப்பூர்வமாக தந்தையர் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் ஹீரோ அவனது தந்தைதான். அவரை ரோல்மாடலாக வைத்துக்கொண்டுதான் ஒவ்வொரு செயலையும் செய்வார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு, தந்தையை மதிக்க கற்றுத் தருவதே இத்தினத்தின் நோக்கம். தந்தைக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3வது ஞாயிறன்று தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.
தாய் ஒரு குழந்தையை கருவில் 10 மாதங்கள் சுமந்து பெற்றெடுத்தார் என்றால், குழந்தையை தனது தோள்மீது தூக்கி சுமந்து வளர்ப்பவர் தந்தைதான். அன்பை கூட அதட்டலாக வெளிப்படுத்துவதான் தந்தையின் சிறப்பு.
நம்மை படிக்க வைத்து ஆளாக்கிய தந்தைக்கு நாம் செய்யும் கைமாறு என்ன தெரியுமா? இவனுடைய தந்தை இந்த அருமையான மகனைப் பெறுவதற்கு எத்தகைய கடும் தவத்தை செய்தானோ என்றும் மெச்சும் அளவிற்கு நாம் நம்முடைய தந்தைக்கு மரியாதையை தேடித்தரவேண்டும் என்று வள்ளுவரே கூறியுள்ளார்.
வீட்டுக்கான கடமையை தாய் கற்றுத் தருகிறார். எனினும் வீட்டுக்கும் நாட்டுக்கும் சமூகத்திற்கு மான கடமையை தந்தையின் வழிநின்றே பல குழந்தைகள் கற்றுக்கொள்கின்றனர். அதனாலேயே தந்தைக்கு கூடுதல் பொறுப்பு கூடிவிடுகிறது.
தான் பட்ட கஷ்டத்தை தன் மகனோ, மகளோ படக்கூடாது என்று எத்தனையோ தியாகங்களை செய்து வளர்த்திருப்பார் தந்தை. இந்த நன்னாளில் உங்களின் தந்தை உங்களுக்காக செய்த தியாகங்களையும், பட்ட கஷ்டங்களையும் எண்ணிப் பாருங்கள். அவருக்கு மரியாதை செய்யுங்கள்.









