அபாயகரமான மக்காவ் காதல் மோசடி

நாட்டில் அதிகமாக நடக்கும் மோசடிச் சம்பவங்களை எதிர்கொள்ள அரசாங்கம் குறிப்பாக தொடர்பு, பல்லூடக ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. பாதுகாப்பு அலைகளை வலுப்படுத்துவது மட்டுமன்றி இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடும் கும்பல்களை அடையாளம் கண்டு கைது செய்து வருகின்றது.
அதே சமயம் மக்கள் மத்தியில் இது தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஆணையம் முனைப்புக் காட்டி வருகின்றது. இருப்பினும் ஒரு சிலர் இன்னமும் இந்த மோசடிகளில் சிக்கித் தவிப்பதையும் நாம் காண முடிகின்றது.

அவ்வகையில் மலேசியாவில் அதிகமாக நடக்கும் இன்னும் சில மோசடி வகைகள் பின்வருமாறு:-

4. காதல் மோசடி

இந்த வகையிலான மோசடி பெரும்பாலும் குறிப்பிட்ட தரப்பினரைக் குறிவைத்து மேற்கொள்ளப்படுகின்றது. தனித்து வாழ்பவர்கள், பணி ஓய்வு பெற்றவர்கள் போன்ற தரப்பினரை முதலில் அடையாளம் கண்டு அவர்களுடன் சமூக வலைத் தளத்தில் நட்பு பாராட்டுவர். அதன் பிறகு குறிவைக்கப்பட்டிருக்கும் நபர்களின் பின்புலத்தை உறுதிப்படுத்திக் கொண்டு அவர்களுடன் மாதக் கணக்கில் நட்பில் இருப்பர். தொடர்ந்து சமயம் வரும்பொழுது காதல் செய்வதாகவும் கூறி அவர்களின் நம்பிக்கையைப் பெறுவர். தொடர்ந்து நாளடைவில் தங்களின் மோசடி நடவடிக்கையை மெல்ல மெல்ல அரங்கேற்றுவர்.

பொதுவாக இந்தக் காதல் மோசடியை மேற்கொள்ளும் நபர்/கும்பல் வெளிநாடுகளில் வசிப்பதாகக் கூறுவர். ஆனால் அவர்களுள் பெரும்பாலானோர் உள்நாட்டில் இருந்தபடியே செயல்படுவர்.

தங்களுக்கு ஏதுவான நேரம் வரும் பொழுது அவர்கள், குறிவைக்கப்பட்டிருக்கும் நபர்களுக்கு வெளிநாட்டில் இருந்து பரிசு (ரொக்கப்பணம், நகை, கைப்பேசி) அனுப்பி வைப்பதாகக் கூறுவர்.

பின்னர் ஓரிரு நாட்களில் அந்நபர்களுக்கு இங்குள்ள கும்பல் தொலைபேசியில் அழைத்து, அந்தப் பரிசுப் பொட்டலம் அமலாக்கத் துறையினரால் கைப்பற்றப்பட்டதாகவும் அதனை வெளிக்கொணர குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும் என்றும் கூறுவர். மேலும், தொகை செலுத்தாவிட்டால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறி பயமுறுத்துவர்.

இன்னும் சிலர் அந்தப் பொட்டலத்தில் போதைப்பொருள், கள்ளப் பணம் போன்றவை இருப்பதாகக் கூறி பணம் பறிப்பர். இதனால் அச்சம் அடைந்த நபர்கள் தப்பித்தால் போதும் என்று எண்ணி அந்தப் பணத்தை அவர்கள் கூறும் வங்கிக் கணக்கில் செலுத்துவர்.

இதற்கிடையே, இன்னும் சில சம்பவங்களில் வெளிநாட்டில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டதாகக் கூறப்படும் பரிசுப் பொட்டலத்தை நாட்டிற்குள் அனுமதிக்க குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும் எனவும் அதன் பிறகே அந்தப் பொட்டலம் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் கூறுவர். இந்தச் சம்பவங்களில் அந்த மோசடிக் கும்பல் தங்களைப் பொருட்கள் அனுப்பும் தரப்பினர் என்று கூறிக் கொள்வர்.

பணம் செலுத்தினால் பரிசுப் பொட்டலம் வந்துவிடும் என்ற ஆர்வத்தில் குறிவைக்கப்பட்டிருக்கும் நபர்களும் அதுபோல் செய்து விடுவர்.
ஆனால் அதன் பிறகு இணையத்தில் அறிமுகமான நண்பரையும் பணம் செலுத்த வேண்டும் எனக் கூறிய தரப்பினரையும் இவர்களால் தொடர்பு கொள்ள இயலாத சுழல் ஏற்படும். அதன் பின்னரே தாங்கள் ஏமாற்றப்பட்டிருப்பதை அவர்கள் உணர்வர்.

5. மக்காவ் மோசடி

இந்த வகையிலான மோசடிகள்தாம் நாட்டில் அதிகம் நடப்பதாகக் கூறப்படுகின்றது. இந்த மோசடிச் சம்பவங்களில் அந்தக் கும்பல் பலதரப் பட்ட யுக்திகளைக் கையாளும். அதே சமயம் குறிவைக்கப்படுபவர்களின் பின்புலத்தையும் இந்தக் கும்பல் முன்னதாகவே உறுதிப்படுத்திக் கொள்ளும்.

குறிப்பாக பெரும்பாலான தொலைபேசி அழைப்பில் இந்த மாக்காவ் மோசடிக் கும்பல் தங்களை போலீஸ் அதிகாரி என அடையாளப்படுத்திக் கொண்டு பேசுவர். இதில் நம்பிக்கையை அதிகரிக்க பெண்கள் உட்பட பல தரப்பினர் தங்களை போலீஸ் என்றும் அமலாக்க அதிகாரிகள் என்றும் அடையாளப்படுத்திக் கொண்டு பேசுவர். அதிலும் பல பேருக்கு இந்தத் தொலைபேசி அழைப்பு மாற்றப்பட்டு குழப்பத்தையும் பதற்றத்தையும் அவர்கள் ஏற்படுத்துவர்.

அதில் குறிவைக்கப்படுவர் போதைப் பொருள், கள்ளப்பணம் போன்ற குற்றச் சம்பவங்களில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அவர்களின் வங்கிக் கணக்கு முடக்கப்படுவதாகவும் கூறி பயமுறுத்துவர்.

பொதுவாக இந்த மோசடிச் சம்பவங்களில் குறிவைக்கப்படுபவர்களுள் பெரும்பாலானோர் வயதானோர், பணி ஓய்வு பெற்றவர்கள்தாம். அவர்கள் இந்த மிரட்டலுக்கு அஞ்சி தங்களின் வங்கிக் கணக்கில் உள்ள பணம் அனைத்தையும் அந்த மோசடிக் கும்பல் வழங்கும் வங்கிக் கணக்கில் மாற்றுவர்.

இன்னும் சிலர் தொலைபேசி அழைப்புகளில் தங்களை வங்கி அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு பேசுவர். அதில் நமது வங்கி சுயவிவரங்களை சரி பார்ப்பதாகக் கூறி நம்மிடமிருந்தே தகவல்களைப் பெற முனைவர். ஒருவேளை தகவல்கள் பெறப்பட்டால் அதனைப் பயன்படுத்தி வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை அபகரிப்பர். இன்னும் சில சம்பவங்களில், வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதாகக் கூறி அவர்கள் வழங்கும் வங்கிக் கணக்கில் பணத்தை மாற்றக் கூறி நம்மிடமே கேட்பர், இல்லையேல் கணக்கில் உள்ள பணம் முடக்கப்படும் என்பர். இதனை நம்பி சிலர் அவசர அவசரமாக அந்தக் கணக்கில் பணத்தை மாற்றி விடுவர்.

பணம் கிடைத்ததை உறுதி செய்ததும் அந்தக் கும்பல் மாயமாகி விடும். அவர்கள் அழைத்திருந்த தொலைபேசி எண்ணை மீண்டும் அழைத்தால் பயனீட்டில் இல்லை என்ற தகவல்தான் வரும். அதன் பிறகே ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்து போலீஸ் புகார் அளிப்பர்.

இதுபோன்ற மோசடிக் கும்பல்களால் தொந்தரவு ஏற்பட்டால் போலீசில் புகார் செய்யவும் அல்லது https://aduan.skmm.gov.my என்ற அகப்பக்கம் aduanskmm@mcmc.gov.my என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் 016-2206262 என்ற வாட்ஸ்அப் எண்கள் வாயிலாகவும் தொடர்பு, பல்லூடக ஆணையத்திடம் புகார் அளிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

இன்னும் பல மோசடிச் சம்பவங்கள் இருந்தாலும் இது வரையில் குறிப்பிடப்பட்ட 5 வகையிலான மோசடிகள்தாம் அதிகம் நிகழ்கின்றன.

(முற்றும்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here