பாசீர் மாஸ், ஜூன் 25 :
நேற்று நண்பகல் 1 மணியளவில், இங்குள்ள ஜெராம் பெர்டாவில் உள்ள கம்போங் சாபியில் மேற்கொள்ளப்பட்ட Ops Wawasan நடவடிக்கையின்போது புதர்களுக்குள் மறைந்திருந்த 51 மியன்மார் சட்டவிரோத குடியேறிகள், பொது நடவடிக்கை படையின் 8 ஆவது பட்டாலியன் (PGA8) உறுப்பினர்களால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களில் 17 முதல் 51 வயதுக்குட்பட்ட 47 ஆண்களும் 4 பெண்களும் அடங்குவர் என்று கிளாந்தான் காவல்துறையின் பொறுப்பதிகாரி, டத்தோ முகமட் ஜாக்கி ஹருன் தெரிவித்தார்.
“சம்பந்தப்பட்ட வெளிநாட்டினர் குழு இருப்பதைக் கண்டறியும் முன்பு, உறுப்பினர்கள் குழு அப்பகுதியைச் சுற்றி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
“கைது செய்யப்பட்ட அனைவரும் அடையாள ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறிவிட்டனர் என்றும் அவர்கள் ஆற்றுப் பாதை வழியாக சட்டவிரோதமாக நாட்டின் எல்லைக்குள் நுழைந்ததாக சந்தேகிக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
“அவர்கள் அனைவரும் ஜெராம் பெர்டா காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர், மேலும் இந்த வழக்கு குடிவரவு சட்டம் 1959/63 இன் பிரிவு 6 (1) (c) இன் படி விசாரிக்கப்பட்டது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட அனைத்து வெளிநாட்டவர்களும் கிள்ளான் பள்ளத்தாக்கில் இயங்கிவரும் உற்பத்தி மற்றும் கட்டுமான வேலை செய்ய இங்கு வந்தனர் என முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக முகமட் ஜாக்கி கூறினார் .