மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில், செத்தியூ மருத்துவமனையின் மருந்தக பொறுப்பதிகாரி மரணம்..!

செத்தியூ, ஜூன் 25 :

சுங்கை தாரோமில் உள்ள ஜாலான் கோத்தா பாரு- கோல திரெங்கானுவில், நேற்று மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் செத்தியூ மருத்துவமனையின் மருந்தக பொறுப்பதிகாரி உயிரிழந்தார்.

செத்தியூ மாவட்ட காவல்துறைத் தலைவர், துணைக் கண்காணிப்பாளர் அஃபாண்டி ஹுசின் கூறுகையில், பலியானவர் கிளாந்தான், தானா மேராவைச் சேர்ந்த நூருல் அத்திகா அவாங் லா, 36 என அடையாளம் காணப்பட்டார்.

இரவு 7.15 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், பெரோடுவா மைவி, பெரோடுவா அல்சா மற்றும் ஹினோ லோரி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது என்றார்.

“பெக்கான் பெர்மைசூரி திசையிலிருந்து சுங்கை தாரோம் நோக்கி பெரோடுவா மைவியை ஓட்டிச் சென்ற பாதிக்கப்பட்டவர், கட்டுப்பாட்டை இழந்து சுங்கை தாரோம் மூன்று சந்திப்பில் பெரோடுவா அல்சாவுடன் மோதியதில் விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

“சுங்கை தோங்கில் இருந்து கிளாந்தான்- ரந்தாவ் பஞ்சாங் நோக்கிச் சென்ற லோரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர் சாலையின் ஓரத்திலிருந்து சாலை சமிக்ஞையில் மோதியது,” என்று அவர் கூறினார்.

விபத்தில் பாதிக்கப்பட்ட நூருல் அத்திகா அவாங் லா மற்றும் அவரது இரண்டு குழந்தைகளான தெங்கு டைம் ஹாடி தெங்கு அமிருல் கமால், 6, மற்றும் தெங்கு ஜைம் ஜுஹ்தி தெங்கு அமிருல் கமால், 9 ஆகியோர் காயங்களுக்கு உள்ளானதாகவும், அவர்கள் ஆரம்ப சிகிச்சைக்காக செத்தியூ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் அஃபாண்டி கூறினார்.

சிகிச்சை பெற்றுவந்த நூருல் அத்திகா, இரவு 9 மணியளவில் செத்தியூ மருத்துவமனையில் இறந்தது உறுதி செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் வேகத்தடை விதிகளை கடைபிடித்து, வாகனங்களை ஓட்டுமாறும் சாலையில் மிகவும் கவனமாக இருக்கவும் ஓட்டுநர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here