குழந்தைகளை ஒருதலைப்பட்சமாக மதமாற்றம் செய்வது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது மட்டுமல்ல, நெறிமுறைகளுக்கும் எதிரானது என்று ஒரு சமூகவியல் பேராசிரியர் கூறுகிறார்.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியரான சையத் ஃபரித் அலடாஸ், ஒருதலைப்பட்சமான மதமாற்றங்கள் பற்றிய தொடர்ச்சியான அறிக்கைகளால் பல மலேசியர்கள் சோர்வடைந்துவிட்டதாக நம்புவதாகக் கூறினார்.
ஒருதலைப்பட்சமாக மதமாற்றம் என்பது அனைத்து தரத்திலும் தவறானது. குறிப்பாகப் பல இன மற்றும் பல மதங்களைக் கொண்ட மலேசியாவில், பல்வேறு மதச் சமூகங்களிடையே நல்லுறவு மற்றும் பரஸ்பர புரிதலைப் பேண வேண்டிய அவசியம் இருக்கும் என்று அவர் கூறினார்.
ஒருதலைப்பட்சமான மதமாற்றம் என்பது சாதாரண தவறு அல்ல. அது கூட்டாட்சி அரசியலமைப்பிற்கு எதிரானது. எந்த ஒரு உலகளாவிய நெறியின் படியும் அது தவறு. இது நெறிமுறையற்றது. ஏனென்றால் குழந்தைகள் அத்தகைய முடிவுகளை எடுக்கக்கூடிய நிலையில் இல்லை.
குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட மதத்தில், ஒரு குறிப்பிட்ட மதத்தை ஆதரிக்கும் குடும்பத்தில் பிறந்தால் அது வேறு. உங்களிடம் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த பெற்றோர்கள் இருந்தால் அதுவும் வித்தியாசமானது. மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் இந்த வேறுபாடுகளைப் பற்றி விவாதித்து தங்கள் குழந்தைகளுக்கு விருப்பத்தை வழங்குகிறார்கள்.
ஆனால் குழந்தைகளை அவர்கள் பிறந்த மதத்திலிருந்து வெளியேற்றுவது, அவர்களுக்கு வயது மற்றும் முடிவெடுக்கும் முதிர்ச்சி இல்லாமல், வெறுமனே நெறிமுறையற்றது என்று அவர் எப்ஃஎம்டியிடம் கூறினார்.
லோவின் மூன்று குழந்தைகளும் பெர்லிஸ் சமய அதிகாரிகளால் இஸ்லாமியர்களாக பதிவு செய்யப்பட்டனர் என்று பெர்லிஸ் முஃப்தி அஸ்ரி ஜைனுல் ஆபிடின் கடந்த வாரம் தெரிவித்தார்.
இருப்பினும், 18 வயதுக்குட்பட்ட எந்தவொரு குழந்தையையும் வேறு மதத்திற்கு மாற்றுவதற்கு இரு பெற்றோரின் ஒப்புதல் தேவை என்று கூட்டரசு நீதிமன்றம் 2018 இல் தீர்ப்பளித்தது.
நேற்று, கோலாலம்பூரில் உள்ள உயர் நீதிமன்றம் தனது மூன்று குழந்தைகளை விடுவிக்க லோவின் ஹேபியஸ் கார்பஸ் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டது. இதற்குப் பதிலளித்த அஸ்ரி, குழந்தைகள் இஸ்லாமியர்களாக இருக்க விரும்பினால், அவர்களைப் பாதுகாக்க சட்டத்தின் கீழ் உள்ள இதர நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து வருவதாகக் கூறினார்.
மூன்று வருடங்களாக தாங்கள் பார்க்காத தாயுடன் செல்ல பிள்ளைகள் கடந்த வாரம் மறுத்து விட்டதாகவும் அவர் கூறினார். குழந்தைகள் தங்கள் தந்தை அல்லது தாயுடன் இருப்பதை விரும்புகிறார்களா என்பது கேள்வியல்ல. அது உண்மையாக இருந்தாலும் சரி, குழந்தைகள் மதமாற்றம் செய்வது பொருத்தமானது என்பதை அஸ்ரி தீர்மானிக்க முடியாது என்று ஃபரித் கூறினார்.
குழந்தைகள் தாயை விட தந்தையை விரும்புகிறார்கள் என்ற கேள்வி மதமாற்றத்திலிருந்து வேறுப்பட்ட ஒரு தனி விஷயம். அவர்கள் தாயுடன் இருப்பதை விட தந்தையுடன் இருக்க விரும்புவது ஒரு விஷயமாக இருந்தால், அதனை நீதிமன்றங்களும் குழந்தை நல சமூக இலாகா அதிகாரிகளும் முடிவு செய்ய வேண்டும்.









