மோட்டார் சைக்கிள் திருட்டுடன் தொடர்புடைய பள்ளி மாணவர்கள் கும்பல் பிடிபட்டது

கோலாலம்பூர், ஜூன் 27 :

மோட்டார் சைக்கிள் திருட்டுடன் தொடர்புடைய இடைநிலைப் பள்ளி மாணவர்களைக் கொண்ட ஒரு கும்பலை மடக்கிய போலீசார், இங்குள்ள அம்பாங் ஜெயா மாவட்டத்தில் திருடப்பட்டதாகக் கூறப்படும் எட்டு மோட்டார் சைக்கிள்களையும் மீட்டுள்ளனர்.

14 முதல் 16 வயதுக்குட்பட்ட ஐந்து பதின்ம வயது மாணவர்களை, கடந்த புதன்கிழமை கைது செய்ததாக அம்பாங் ஜெயா காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் முகமட் ஃபாரூக் எஷாக் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் அம்பாங் ஜெயா மாவட்டத்தில் உள்ள இடைநிலைப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அம்பாங் ஜெயாவின் பல்வேறு இடங்களில் இருந்து திருடப்பட்ட எட்டு Honda EX5 மோட்டார் சைக்கிள்கள் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டதாகவும் முகமட் ஃபாரூக் கூறினார்.

“வயர்களை இணைப்பதன் மூலம் மோட்டார் சைக்கிளை இயக்கும் திறனை மாணவர்கள் தவறாக பயன்படுத்தியுள்ளனர் .

அவர்களது முக்கிய இலக்கான EX5 மாடல்கள் கொண்ட மோட்டார் வண்டிகளை அவர்கள் தங்கள் சொந்த உபயோகத்திற்காக திருடினார்கள். இந்த கைதுகள் மூலம் எட்டு மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்குகளை தீர்த்து வைத்துள்ளோம்,” என்றார்

கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் விசாரணைகளுக்காக போலீஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டதாக முகமட் பாரூக் கூறினார்.

குற்றவியல் சட்டத்தின் 379A பிரிவின் கீழ் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கு விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here