ஷா ஆலாம், ஜூன் 29 :
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இணைய மோசடி வழக்குகளில் சிலாங்கூர் மாநிலம் RM59.6 மில்லியன் இழப்புகளை பதிவு செய்துள்ளது.
சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ அர்ஜுனைடி முகமட் இதுபற்றிக் கூறுகையில், இந்த மோசடியில் மொத்தம் 1,354 வழக்குகள் பதிவாகின என்று கூறினார், இது மாநிலத்தில் பதிவான மொத்த வணிக வழக்குகளில் 75 விழுக்காடு ஆகும், மக்காவ் மோசடியில் அதிக எண்ணிக்கையிலான இணைய மோசடிகளே பதிவாகியுள்ளன என்றார்.
“எங்கள் விசாரணையின் அடிப்படையில், பெரும்பாலான (RM59.6 மில்லியன்) பணம் வெளிநாடுகளுக்கு மாற்றப்பட்டு, நாட்டின் பொருளாதாரத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று அவர் இன்று மாநில அளவிலான ரோயல் மலேசியா போலீசின் (PDRM) ஊழல் எதிர்ப்பு பிரச்சாரத்தை தொடங்கிய பின்னர் கூறினார்.
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், 1,700 க்கும் மேற்பட்ட நபர்கள் போலிக் கணக்கு உரிமையாளர்களாக இருந்ததற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அர்ஜுனைடி கூறினார்.
போலிக் கணக்குகளைப் பயன்படுத்தும் முறையால், உண்மையான குற்றவாளிகள் மோசடியில் ஈடுபட்டதை நிரூபிப்பது காவல்துறைக்கு கடினமாக இருந்தது என்று அவர் கூறினார்.
“தற்போதைய தொழில்னுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப சட்டங்களைத் திருத்த வேண்டும் அல்லது புதிதாக இயற்ற வேண்டியதன் அவசியத்தை நான் வெளிப்படுத்தினேன். ஏனெனில் இது இணைய குற்றமாகும். எங்கள் சட்டம் ஆன்லைன் குற்றங்களை உள்ளடக்கவில்லை, ”என்று அவர் கூறினார்.
குற்றவியல் சட்டத்தின் 420வது பிரிவின் கீழ் தற்போதுள்ள சட்டமான மோசடி, ஆன்லைன் வங்கி மற்றும் பணப்பரிமாற்ற முறையின் தற்போதைய சூழ்நிலையை சந்திக்காததால் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றார்.