லங்காவி, ஜூன் 30 :
லங்காவித் தீவைச் சுற்றி, கடந்த ஏழு ஆண்டுகளில் நீரில் மூழ்கிய சம்பவங்கள் குறித்து, 35 புகார்களை மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை பெற்றுள்ளது என்றும் அதில் மொத்தம் 28 பேர் உயிரிழந்தனர், 6 பேர் காயமடைந்தனர் மற்றும் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார் என்றும் கெடா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் சயானி சைடன் கூறினார்.
“பல பொது கடற்கரைகள், நீர்த்தேக்க குளங்கள், தாசிக் தயாங் பந்திங் மற்றும் பிரபலமான நீர்வீழ்ச்சி பகுதிகளில் நீரில் மூழ்கும் சம்பவங்கள் தொடர்பான புகார்கள் பெறப்பட்டன.
“இந்த எண்ணிக்கை 2016 முதல் இந்தாண்டு வரையான ஏழு ஆண்டுகளாக இருந்தாலும், இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் கவலையளிக்கிறது,” என்று லங்காவி தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவில், (PBB SWART) தீயணைப்பு அதிகாரிகளுக்கான அடிப்படைப் பாடநெறியில் பங்கேற்ற ஒன்பது பங்கேற்பாளர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கிய பின்னர், அவர் இதனைக் கூறினார்.
தீவில் PBB SWART நிறுவப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த அவர், பந்தாய் செனாங்கை ஒவ்வொரு நாளும் கண்காணிக்க ஆறு PBB SWART குழு கடமையில் இருக்கும், இது மாநிலத்தில் ஒரு முன்னோடியான குழுவாக மாறும் என்றும் அவர் தெரிவித்தார்.
“அதிக ஆபத்துள்ள பகுதிகளில் நீரில் மூழ்கி பலியானவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான ஒரு முன்னோடி நடவடிக்கையாக, காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 12 மணி நேரம் தொடர்ச்சியான ரோந்து மற்றும் கண்காணிப்பை மேற்கொள்வது அக்குழுக்களின் முக்கிய பணியாகும்.
“இந்த குழு (PBB SWART) விரிவுபடுத்தப்பட்டு, கடற்கரைகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் நெரிசலான ரிசார்ட்டுகள் உட்பட மாநிலத்தில் உள்ள பல ஆபத்தான இடங்களுக்கு விரிவுபடுத்தப்படும்,” என்று அவர் மேலும் கூறினார்.