ஜோகூரில் இயங்கிவந்த சட்டவிரோத எரிபொருள் பிரித்தெடுப்பு மையம் போலீசாரால் முறியடிப்பு – ஐவர் கைது

போந்தியான், ஜூன் 30 :

இங்குள்ள பெக்கான் நானாஸில் உள்ள ஒரு சட்டவிரோத எரிபொருள் பிரித்தெடுப்பு (மீள்சுழற்சி) மையத்தின் செயற்பாடுகள் காவல்துறையினரால் முறியடிக்கப்பட்டதுடன், அதனுடன் தொடர்புடைய ஐவரையும் கைது செய்தனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 28) மாலை சுமார் 5.30 மணியளவில் கம்போங் ஜெரோம் பத்துவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் சோதனை நடத்தியதில், மூன்று வெளிநாட்டவர்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடமிருந்து அவர்கள் மொத்தம் RM7.3 மில்லியன் மதிப்புள்ள வாகனங்கள், உபகரணங்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட இயந்திர எண்ணெ ஆகியவற்றையும் அவர்கள் கைப்பற்றியதாக ஜோகூர் காவல்துறையின் செயல்பாட்டு தலைவர், மூத்த துணை கமாண்டர் ஜலாலுடின் ஹமிட் தெரிவித்தார்.

மேலும் அவ்வளாகத்தில், RM230,400 மதிப்புள்ள 128,000 லிட்டர் என்ஜின் ஆயில் மற்றும் 12 டேங்கர் லோரிகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கனரக இயந்திரங்கள் ஆகியவற்றை போலீசார் கண்டுபிடித்தனர், என்றார்.

இக்கும்பல் பயன்படுத்திய என்ஜின் எண்ணெயை மீள்சுழற்சி செய்து, குறைந்த தரத்திலான டீசலாக மாற்றும் நடவடிக்கையை செய்து வந்துள்ளது, இது இந்த ஆண்டு ஜோகூரில் இனங்காணப்பட்ட முதல் வழக்கு என கண்டறியப்பட்டது என்று அவர் கூறினார்.

“தொழிற்சாலையின் உரிமையாளர் மற்றும் தலைவர் என சந்தேகப்படும் 48 வயதுடைய ஒருவர் உட்பட சந்தேக நபர்கள், தொழிற்சாலைகள் மற்றும் வாகனப் பணிமனைகளில் இருந்து பயன்படுத்தப்பட்ட இயந்திர எண்ணெயை லிட்டருக்கு 30 சென்ட் என்ற விலையில் வாங்கியுள்ளனர்.

“(செயலாக்கத்திற்குப் பிறகு) ஜோகூர் பாரு, கோலாலம்பூர் மற்றும் போர்ட் கிள்ளானிலுள்ள தொழிற்சாலைகள் மற்றும் தொடர்புடைய தொழிற்சாலைகளுக்கு இறுதிப் பொருள் லிட்டருக்கு RM1.80 என்ற விலையில் விற்கப்படுகிறது,” என்று அவர் வியாழக்கிழமை (ஜூன் 30) ​​நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

“அவர்களது இறுதித் தயாரிப்பு என்பது கனரக இயந்திரங்களுக்கான குறைந்த தரமான டீசல் ஆகும், இது வாகனங்களுக்கானது அல்ல.

“இந்த வளாகம் எவ்வாறு பதிவு செய்யப்பட்டது என்பதையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம், ஆனால் திட்டமிடப்பட்ட பொருட்களைக் கையாள்வதற்கான அனுமதி அவர்களிடம் உள்ளதாகத் தெரிகிறது ” என்று ஜலாலுதீன் கூறினார், இந்தக் கும்பல் குறைந்தது ஆறு மாதங்களாவது செயலில் இருந்ததாக நம்பப்படுகிறது.

26 முதல் 49 வயதுடைய சந்தேக நபர்கள், சுற்றுச்சூழல் தரச் சட்டம் 1974 இன் பிரிவு 34(B)(1)(A) மற்றும் குடிவரவுச் சட்டம் 1959/63 இன் பிரிவு 6(1)(C) ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here