பேலிங், ஜூலை 4 :
இன்று பிற்பகல் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால், இங்குள்ள குபாங்கில் ஏறக்குறைய 20 வீடுகள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.
சம்பந்தப்பட்ட பகுதிகளாக கம்போங் இபோய் மற்றும் கம்போங் தஞ்சோங் லுவாஸ் ஆகிய கிராமங்களின் அருகிலுள்ள ஆற்றில் இருந்து நீர் நிரம்பி வழிகின்றதால் அவை வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
பேலிங் மாவட்ட சிவில் பாதுகாப்பு அதிகாரி, கேப்டன் ரசிதா காசிம் கூறுகையில், நண்பகல் 2 மணியளவில் மழை தொடங்கியதாகக் கூறப்படுகிறது, அதனைத்தொடர்ந்து ஆற்றங்கரையோரங்களில் வசிப்பவர்களின் வீடுகளுக்குள் நீர் புகுந்தது.
“மாலை 6 மணியளவில் சம்பவம் தொடர்பான அறிக்கைகளை பேலிங் மாவட்ட சிவில் பாதுகாப்பு துறையினர் பெறத் தொடங்கியதாகவும், தமது உறுப்பினர்கள் கண்காணிப்பு நடவடிக்கைக்காக அந்த இடத்திற்கு விரைந்ததாகவும் அவர் கூறினார்.
” கண்காணிப்பு இன்னும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, மேலும் நிலைமை அவர்களுக்கு ஆபத்தானது என்று கண்டறியப்பட்டால் குடியிருப்பாளர்களை அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அவர் கூறினார்.
ரசிதாவின் கூற்றுப்படி, இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கை தெரியவில்லை மற்றும் இன்று மாலை 7 மணி வரை தற்காலிக வெளியேற்ற மையம் எதுவும் திறக்கப்படவில்லை.