மஇகா முன்னாள் தேசியத் துணைத் தலைவரும் முன்னாள் துணையமைச்சருமான டான்ஸ்ரீ டத்தோ சி. சுப்ரமணியம் இன்று செவ்வாய்க்கிழமை (5 ஜூலை 2022) இரவு 7.58 மணியளவில் காலமானார்.
மஇகா அரசியலில் நீண்ட கால அனுபவத்தைக் கொண்டிருந்த டான்ஸ்ரீ சுப்ரா, மிகப்பெரிய எண்ணிக்கையிலான ஆதரவாளர்களைக் கொண்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சியில் அவர் மிகவும் செல்வாக்குமிக்க ஒரு தலைவராகவே இருந்ததையும் அரசியலில் காண முடிந்தது. அரசியலிலும் பொதுவாழ்க்கையிலும் அவர் ஒரு கம்பீரமான தலைவராகவே இருந்துவந்தார்.
சில காலம் நோய்வாய்ப்பட்டிருந்த டான்ஸ்ரீ சுப்ரா, நேற்றிரவு 7.58 மணியளவில் காலமானார். அன்னாரின் மறைவுச் செய்தி கேட்டு அவரின் தீவிர ஆதரவாளர்களும் நண்பர்களும் தங்களின் அனுதாபத்தைத் தெரிவித்து வருகின்றனர்.
மஇகா மட்டுமன்றி பாரிசான் நேஷனல் தலைவர்களுடன் மிக நெருக்கமான தொடர்புகளை டான்ஸ்ரீ சுப்ரா கொண்டிருந்தார். தேசிய முன்னணித் தலைவர்கள் மத்தியில் செல்வாக்குமிக்க ஒரு தலைவராக அவர் திகழ்ந்தார் அரசியலில் நேர்மையும் துணிச்சலும் அவரின் மிகப்பெரிய ஆயுதமாக இருந்தது.
வியாழக்கிழமை இறுதிச்சடங்கு
டான்ஸ்ரீ சி. சுப்ரமணியம் அவர்களின் இறுதிச்சடங்குகள் எண் 26, ஜாலான் 16/5, 46350 பெட்டாலிங் ஜெயா, சிலாங்கூர் எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை 7, ஜூலை 2022ஆம் நாள் நடைபெறும் என்று அவரின் புதல்வர் டத்தோ சுந்தர் சுப்ரமணியம் தெரிவித்தார்.
தொடர்புக்கு: சங்கர்: 012-3607485, மோகன்:016-6747508