மலாக்கா, ஜூலை 6 :
இன்று (ஜூலை 6) அதிகாலை இங்குள்ள ஜாலான் பந்தாய் புத்திரியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில், முன்னாள் இராணுவ கமாண்டோ ஒருவர் உயிரிழந்தார்.
மஸ்லான் முகமட், 42 என அடையாளம் காணப்பட்ட நபர், கடுமையான காயங்களால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மலாக்கா தெங்கா காவல்துறை தலைவர், துணை ஆணையர் கிறிஸ்டோபர் பாடிட் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர் மோட்டார் சைக்கிளில் சுங்கை உடாங்கிற்குச் சென்று கொண்டிருந்தபோது, அதிகாலை 4.20 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக அவர் கூறினார்.
மற்றொரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநாரான நூர்ஷாபிகா அப்துல்லா என்ற 14 வயது சிறுமி பலத்த காயம் அடைந்ததாக கிறிஸ்டோபர் தெரிவித்தார்.
அந்தச் சிறுமி எதிர் பாதையில் சவாரி செய்து கொண்டிருந்தார், ஆனால் அவருக்கு சரியான ஓட்டுநர் உரிமம் இல்லை, என்றார்.
சிறுமி ஓட்டிய மோட்டார் சைக்கிள் 60 வயது முதியவர் ஒருவரின் கீழ் பதிவு செய்யப்பட்டதாகவும், மார்ச் 2015 முதல் சாலை வரி புதுப்பிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41(1)ன் கீழ் விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஏசிபி கிறிஸ்டோபர் மேலும் தெரிவித்தார்.










