தீயணைப்பு துறையில் நிலவும் 1,250 பணி வெற்றிடங்கள் இந்த ஆண்டுக்குள் நிரப்பப்படும்- டத்தோ முகமட் ஹம்டான் தகவல்

புத்ராஜெயா, ஜூலை 12 :

மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையில், நாடு முழுவதும் பல்வேறு பதவிகளை உள்ளடக்கிய மொத்தம் 1,250 காலியிடங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிரப்பப்படும் என்று அதன் இயக்குநர் ஜெனரல் டத்தோ முகமட் ஹம்டான் தெரிவித்துள்ளார்.

1,000 காலியிடங்கள் தரம்- KB19 அதிகாரிகளாலும், 250 இடங்கள் தரம்- KB29 மற்றும் தரம்-KB41 அதிகாரிகளாலும் நிரப்பப்படும் என்று அவர் கூறினார்.

இந்த பணி வெற்றிடங்கள் உறுப்பினர்களின் கட்டாய ஓய்வு மற்றும் பிற காரணிகளால் ஏற்பட்டதாகவும் தீபகற்பம், சபா, சரவாக் மற்றும் லாபுவான் ஆகிய பகுதிகளில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் மொத்தம் 1,250 ஊழியர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்றும், அவற்றில் புதிய நிலையங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் ஹம்டான் கூறினார்.

மேலும் “பொது சேவைத் துறையின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, அடுத்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 1,630 காலியிடங்கள் நிரப்பப்படும்” என்று, வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சகத்தின் இபாதா குர்பான் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த நிகழ்வில் வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சகத்தின் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் இஸ்மாயில் அப்துல் முத்தாலிப் மற்றும் அதன் பொதுச்செயலாளர் டத்தோ எம் நூர் அஸ்மான் தைப் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அத்தோடு பலியிடப்பட்ட குர்பான் இறைச்சி, புத்ராஜெயாவைச் சுற்றியுள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு துறை உறுப்பினர்கள், வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சக ஊழியர்கள் மற்றும் அஸ்னாஃப் குழுக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here