கோலாலம்பூர், ஜூலை 18 :
சமூக ஊடகங்களில் வீடியோ பதிவுகள் மூலம் இஸ்லாத்தை இழிவுபடுத்தியதாகக் கூறி, காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நபர், இன்று முதல் வியாழக்கிழமை வரை நான்கு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
செப்பாங் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் வான் கமாருல் அஸ்ரான் வான் யூசோப் கூறுகையில், உணவு விநியோகம் செய்யும் நபராக பணிபுரிந்த 39 வயது நபர், டாங் வாங்கி மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் (IPD) சிறைக் கூண்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
“கோலாலம்பூர் மாவட்ட நீதிமன்றத்தினால் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது,” என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் ஒரு சுருக்கமான அறிக்கையில் கூறினார்.
நேற்று, சமூக ஊடகங்களில் வீடியோ பதிவுகள் மூலம் இஸ்லாத்தை அவமதித்ததாகக் கூறப்படும் ஒரு நபரை காவல்துறை கைது செய்ததாக செய்திகள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
சைபர்ஜெயாவில் பதிவு செய்யப்பட்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து, சந்தேக நபர் நேற்று நண்பகல் 12.30 மணியளவில் புச்சோங்கின் புக்கிட் கூச்சாயில் கைது செய்யப்பட்டார்.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 298A மற்றும் மலேசிய தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1998 இன் பிரிவு 233 இன் படி புக்கிட் அமானின் குற்றப் புலனாய்வுப் பிரிவு (USJT) விசாரணையை நடத்தியது.