மலேசிய இந்து சங்கத்தில் தலைமைத்துவ மாற்றம் புதிய தலைவரானார் கணேசன் தங்கவேலு

மலேசிய இந்து சங்கத்தின் புதிய தலைவராக கணேசன் தங்கவேலு தேர்வுசெய்யப்பட்டார். இன்று பண்டார் சன்வே ஸ்ரீ சுப்ரமணியர் ஆலய மண்டபத்தில் மலேசிய இந்து சங்கத்தின் 45ஆவது தேசிய ஆண்டு பொதுக்கூட்டமும் மத்திய செயலவை பதவிகளுக்கான தேர்தலும் நடைபெற்றது.

இத்தேர்தலில் 10 பதவிகளுக்கு 20 போட்டியிட்டனர். மொத்தமாக 1,448 பேர் வாக்குகள் செலுத்தினர். அதிலும் 76 வாக்குகள் செல்லாத நிலையில் இருந்ததாகத் தேர்தல் அதிகாரி நாகராஜன் முன்னதாக அறிவித்தார். இந்நிலையில் இத்தேர்தலில் கணேசன் தங்கவேலு அணியின் சார்பில் போட்டியிட்ட அனைவரும் வெற்றிபெற்றனர்.

குறிப்பாக டாக்டர் கோபி 974 வாக்குகளும் கணேசன் தங்கவேலு 967 வாக்குகளும் எஸ். கலைவாணி 952 வாக்குகளும் கணேஷ் பாபு 951 வாக்குகளும் ஆதிமூலம் 947 வாக்குகளும் எம், பாலகிருஷ்ணன் 939 வாக்குகளும் முனியாண்டி 931 வாக்குகளும் பெருமாள் 918 வாக்குகளும் கே. சுந்தரி 917 வாக்குகளும் பி. வேலாயுதம் 916 வாக்குகளும் பெற்றதாகத் தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

மலேசிய இந்து சங்கத்தின் 27 மத்திய செயலவை பதவிகளுள் 10 பதவிகள் மட்டுமே சுழற்சி முறையில் காலியாகி நிலையில் இப்பதவிகளுக்குப் போட்டியிருந்தது. புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட 10 பேர், ஏற்கெனவே உள்ள 17 பேருடன் இணைந்து சங்கத்தின் முதன்மை பதவிகள் குறிப்பாகத் தலைவர் பதவிக்கான நபரைத் தேர்வுசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதில் தலைவர் பதவிக்கு கணேசன் தங்கவேலு தேர்வுசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து சங்கத்தின் துணைத் தலைவராக கணேஷ் பாபு, உதவித்தலைவர்களாக வேலாயுதம், சாந்தா, தலைமைச் செயலாளராக மாணிக்கவாசகம், துணைத் தலைமைச் செயலாளராக எஸ். அழகேந்திரன், பொருளாளராக முனியாண்டி, துணைப் பொருளாளராக பாலகிருஷ்ணன் ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டதாக கணேசன் தங்கவேலு மேடையில் அறிவிப்புச் செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய புதிய தலைமைத்துவத்தினர் இது ஒரு சமய இயக்கம். எங்கள் இயக்கத்திற்குப் புதிய தலைமைத்துவம் வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நாங்கள் தேர்தலில் களமிறக்கினோமே தவிர யார் மீதும் எங்களுக்கு வன்மம் கிடையாது. முன்னதாகத் தேர்தலை முன்னிட்டு நாங்கள் வௌியிட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவதே எங்களின் முதன்மை வேலை.

அதேபோல் இனி மலேசிய இந்து சங்கத்திற்குள் தனிமனித நிலைப்பாடுகள் கிடையாது. இதுவரையில் இழந்தவற்றை மீட்போம். அதேபோல் ஒவ்வோர் ஆண்டும் பொதுக்கூட்டம் தவறாது நடத்தப்படும். அதில் கலந்துகொள்ளும் பேராளர்கள், உறுப்பினர்கள் அனைவருக்கும் போதுமான வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும்.

இனி சிறு சிறு சர்ச்சைகள், குளறுபடிகளுக்கு ஒருபோதும் இடம்தர மாட்டோம் என அவர்கள் குறிப்பிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here