அலோர் ஸ்டார், ஆகஸ்ட் 4 –
பாலிங் மாவட்டத்தில் உள்ள இரண்டு தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று இரவு 31 ஆக இருந்த நிலையில், இன்று காலை 27 ஆக குறைந்துள்ளது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி, நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 13 பேர் தெங்கு ஹப்சா தேசியப் பள்ளியிலுள்ள பிபிஎஸ்ஸில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும், மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் டேவான் துன் அப்துல் ரசாக் பிபிஎஸ்ஸில் உள்ளனர் என்றும் பாலிங் சிவில் பாதுகாப்புப் படையின் துணைத் தலைவர் லெப்டினன்ட் (PA) முகமட் துல்ஹைடி கலீல் தெரிவித்தார்.
“பிபிஎஸ்ஸில் உள்ள 27 பேர் இன்னும் வீடு திரும்பவில்லை, ஏனெனில் அவர்களின் வீடுகள் சுத்தம் செய்யப்படவில்லை, வீடு சுத்தம் செய்து, அவை தயாராக இருந்தால், பாதிக்கப்பட்ட அனைவரும் இன்று தங்கள் வீடுகளுக்குத் திரும்புவார்கள் என்றும் அதன் பின் பிபிஎஸ் மூடப்படும்” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்கிழமை மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் முக்கிம் பாலிங், முக்கிம் பாகாய் மற்றும் முக்கிம் சியோங் ஆகிய இடங்களில் பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.