புதிய வழமைக் கலாச்சாரத்தை கடைப்பிடித்து நடத்தப்படும் மஹா 2022 கண்காட்சி

மஹா 2022 என்றழைக்கப்படும் மலேசிய விவசாயம், தோட்டக்கலை, விவசாய சுற்றுலா கண்காட்சியானது தற்போதைய புதிய வழமைக் கலாச்சாரத்திற்கு ஏற்ப சிறு மாற்றங்களோடு நடத்தப்படுகிறது.
குறிப்பாக வருகையாளர்களுக்குப் புதுவித அனுபவத்தை ஏற்படுத்துவது மட்டுமன்றி விவசாயம், உணவுத்துறையில் தொழில்நுட்ப மேம்பாட்டையும் இம்முறை கண்காட்சி வெளிக்காட்டும்.
குறிப்பாக வர்த்தக ஒருங்கிணைப்பு நடவடிக்கை அம்சங்கள், மாநாடு – கருத்தரங்கு ஏற்பாடு, மெய்நிகர் முறையில் கண்காட்சி முகப்பிடங்களுக்கான அனுமதி ஆகிய அம்சங்களும் இதில் அடங்கும்.
மஹா கண்காட்சியினை இம்முறை ஹைபிரிட் முறையில் நடத்தப்போவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டதை அடுத்து பலரும் அந்தச் செயல்பாடு என்னவென்று இருக்கும் என்பதை எதிர்பார்த்திருப்பதாக விவசாய – உணவுத் தொழில்துறை அமைச்சு நம்புகின்றது.
இதற்கு முன் மஹா கண்காட்சி நேரடி முறையில் நடத்தப்பட்டதை ஏற்கெனவே வந்திருந்த வருகையாளர்கள் நன்கு அறிவர். ஆனால் இம்முறை கண்காட்சியில் கூடுதல் அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
அதாவது மெய்நிகர் முறையிலும் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. நேரடி – மெய்நிகர் என இரு முறைகளில் இந்தக் கண்காட்சி இம்முறை நடத்தப்படுகின்றது.
அதிலும் ஆன்லைன் வாயிலாக விவசாய – உணவுத் தொழில்துறையில் வர்த்தகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட தளம்தான் மஹா 2022 மெய்நிகர் கண்காட்சி.
நேரடிக் கண்காட்சியில் தருவிக்கப்படுவதைப்போல் இந்த மெய்நிகர் முறையிலான கண்காட்சியில் உள்நாடு, வெளிநாட்டுச் சந்தைகளுக்கான வர்த்தகப் பரிமாற்றமும் நிர்ணயிக்கப்படும்.
அந்த வல்லமையை இந்த மெய்நிகர் கண்காட்சி அம்சம் கொண்டுள்ளது. குறிப்பாக கலந்துரையாடல்கள், வர்த்தக இணைப்பு, வெபினர், வீடியோ கூட்டம், கண்காட்சித் தயாரிப்புகள் சிறப்புக் கழிவுகள் போன்ற அம்சங்களும் இதில் காட்சிப்படுத்தப்படும்.
அதிலும் நேரடி முறையிலான கண்காட்சிக்கு வருகை தரும்போது கிடைக்கும் அனுபவம் போன்றே இதிலும் கிடைக்கும்.
கோவிட்-19 வைரஸ் தொற்றுப் பரவலை எதிர்கொள்ள சமூகத்தில் புதிய வழமைக் கலாச்சாரம் கடைப்பிடிக்கப்படுவதை அமைச்சு அறிகின்றது. இது விவசாயத் துறை, இம்முறை மஹா கண்காட்சி ஏற்பாடு உட்பட பல்வேறு அம்சங்களில் தொழில்நுட்பப் பயன்பாட்டிற்கு உந்துசக்தியாகவும் அமைந்துள்ளது.
இம்முறை மஹா கண்காட்சி புதிய கோட்பாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ஒரு புதிய பாதையாக அமையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம் இம்முறை கண்காட்சியில் கோவிட்-19 வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கு அமைச்சு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது. குறிப்பாக இந்தக் கண்காட்சி நடைபெறும் மாநாட்டின் உள்பகுதியிலும் வெளிப்பகுதியிலும் வருகையாளர்கள் முகக்கவசம் அணிந்திருப்பது கட்டாயமாக்கப்படுகிறது.
அதேபோல் குறிப்பிட்ட சில முக்கிய இடங்களில் இந்தக் கோவிட்-19 தொற்றுப் பரவல் குறித்த எச்சரிக்கை நோட்டீஸுகள் வைக்கப்படும். அதிலும் இந்தத் தொற்றுப் பரவலுக்கான அறிகுறி தென்படும் நபர்கள் நேரடி முறையில் இக்கண்காட்சியில் பங்குபெற வேண்டாம் எனவும் முன்னதாகவே அறிவுறுத்தப்படுகிறது.
விவசாய – உணவுத் தொழில்துறை அமைச்சின் கீழ் உள்ள அனைத்து இலாகா – அமைப்புகளிலும் சமூக வலைத்தளங்களிலும் இந்த நினைவுறுத்தல் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது.
இம்முறை மஹா கண்காட்சியின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா நாளை ஆகஸ்டு 6ஆம் தேதி நடைபெறுகிறது. அந்நிகழ்ச்சியில் பிளெக் ஹனிபா, ரோஸ்லான் மடுன், டயாங் நூர்ஃபைசா உள்ளிட்ட கலைஞர்களின் படைப்புகளும் இடம்பெறவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here