பெர்னாமா டிவி ஊடகத்தின் செயல்பாடுகள் பிரத்தியேக நேர்காணல்

மலேசியாவில் செய்தி சேகரிப்பு மையங்களுள் முன்னோடியாக விளங்கும் பெர்னாமா டிவி ஊடகம் குறித்து பல தகவல்களை அறிய மக்கள் ஓசை, பெர்னாமா குழுமத்தின் ஒளிபரப்புத்துறைத் தலைவர் (தொலைக்காட்சி – வானொலி) அருள்ராஜு துரைராஜை நேர்காணல் செய்தது. அவர் பெர்மானா டிவி குறித்து பல்வேறு பல சுவாரஸ்யமான தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

கே: பெர்னாமா டிவி எப்போது தோற்றுவிக்கப்பட்டது?
ப: 1998ஆம் ஆண்டு ஏபெக் மாநாடு, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான ஒளிபரப்புத் தளமாக இந்த ஊடகம் தொடங்கப்பட்டது. ஆனால் 2008ஆம் ஆண்டுதான் பெர்னாமா டிவி அதிகாரப்பூர்வமாகத் தோற்றுவிக்கப்பட்டது. அப்போது ஆஸ்ட்ரோ 502 அலை வரிசையில் எங்களின் செய்திகள் ஒளிபரப்பப்பட்டன.
அதன் அடிப்படையில் மலாய், ஆங்கிலம், தமிழ், மாண்டரின் மொழிச் செய்திகளை நாங்கள் தயாரித்து அதனை அந்தத் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு விஎச்எஸ் கேசட் மூலம் அனுப்பி வைப்போம். இது தவிர அப்போது இயங்கிக் கொண்டிருந்த மற்றொரு தொலைக்காட்சிக்கும் நாங்கள் எங்களின் தயாரிப்புகளை அனுப்பி வைப்போம்.

கே: பெர்னாமாவில் தற்போது எத்தனை பேர் பணிபுரிகின்றனர்?
ப: கோலாலம்பூரில் உள்ள பெர்னாமா தலைமையகத்தில் பெர்னாமா டிவி பிரிவில் 180 பணியாளர்கள் உள்ளனர். அவர்களுள் செய்தியாளர்கள், நிருபர்கள், புகைப்படக் கலைஞர்கள், வீடியோ பதிவு கலைஞர்களும் அடங்குவர். இது தவிர எங்களுக்கு ஆறு மாநிலங்களில் செய்தியாளர்கள், புகைப்பட – வீடியோ கலைஞர்கள் உள்ளனர். பினாங்கு, கெடா, ஜோகூர், கிளாந்தான், சபா, நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்கள் அவையாகும்.

கே: பொதுவாக செய்தி சேகரிப்புப் பணிகள் எப்படி மேற்கொள்ளப்படுகின்றன?
ப: சில நிகழ்ச்சிகள் தொடர்பான அழைப்புகள் முன்னதாகவே கிடைத்து விடும். சில நிகழ்ச்சிகள் அல்லது சம்பவங்கள் குறிப்பாக விபத்துகள், பேரிடர் போன்ற நிகழ்வுகள் நடந்த பின்புதான் தெரிய வரும். அழைப்பு கிடைக்கப்பெறும் நிகழ்ச்சிகளுக்கு முன்கூட்டியே நிருபர், புகைப்படக் கலைஞர் அல்லது வீடியோ பதிவுக் கலைஞர்களை உறுதி செய்வோம். அதற்கேற்ப அவர்களும் அந்த நிகழ்ச்சிகளுக்குச் சென்று செய்தி சேகரிப்பர்.
பொதுவாக நிருபர்களுக்கு அந்த நிகழ்ச்சியில் நடைபெறும் அல்லது பேசப்படும் விவகாரங்களுள் எதனை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பது தெளிவாகத் தெரியும். அவர்கள் அந்த விவகாரங்களைச் சார்ந்து செய்திகளை உருவாக்குவர். அதன் பிறகு நமக்கென உள்ள உலாவி அடிப்படையிலான செய்தி அறை செயல்முறையில் அந்தச் செய்திகளைப் பதிவேற்றம் செய்வர். அந்தச் செய்திகள் பதிவேற்றமானதும் அதனைக் குறிப்பிட்ட வர்ணங்கள் வைத்து அடையாளப்படுத்திக் கொள்வோம்.
உதாரணத்திற்கு நிருபர்கள் பதிவு செய்த செய்தி குறிப்பிட்ட வர்ணத்தில் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும். அதனை செய்தி ஆசிரியர்கள் அடையாளம் கண்டு திருத்தம் செய்த பிறகு மற்றொரு வர்ணம் மாற்றப்படும். அதேபோல்தான் வீடியோ காணொலியிலும் எந்தக் குறிப்பிட்ட பதிவினைச் செய்தியில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்பதை நிருபர்கள் அறிந்து கொள்வர்.
பொதுவாக எந்த விவகாரத்தை முன்னிலைப்படுத்துகின்றோமோ அது சார்ந்த வீடியோ காணொலியில் (உரையாடல், சம்பவங்கள்) குறிப்பிட்ட இடத்தை மட்டுமே வீடியோ பதிவு கலைஞர்கள் இந்தச் செய்தி அறை செயல்முறையில் அந்தச் செய்திகளில் கூடுதல் அம்சங்கள் உதாரணத்திற்கு பொருட்கள் விலையேற்றம் என்றால் அதில் சந்தையில் மக்கள் பொருட்கள் வாங்குவதுபோன்ற காணொலிப் பதிவையும் நாங்கள் செய்தியின் இடையே இடம்பெறச் செய்வோம். இதுபோன்ற காணொலிப் பதிவுகள் நம்மிடம் ஏற்கெனவே இருக்கும். அதனை ஆசிரியர்கள் – தயாரிப்பாளர்களின் அனுமதியோடு வீடியோவைக் கத்தரிக்கும் எடிட்டர்கள் இணைப்பர். அதன் பின்னர் அந்தக் காணொலிகளுக்கான தரம் உயர்த்தப்பட்டு அதனைச் செய்தியில் இணைப்பதற்குத் தயாராகுவோம்.

கே: அரசியல், நாடாளுமன்றக் கூட்டத் தொடர் உள்ளிட்ட முதன்மைச் செய்திகள் எந்த மொழியில் சேகரிக்கப்படுகின்றன? அதனை எப்படி மற்ற மொழிகளுக்கு மொழிபெயர்த்துக் கொள்கிறீர்கள்?
ப: இதுபோன்ற முதன்மைச் செய்திகளைச் சேகரிக்கும் நிருபர்கள் அதனை மலாய் அல்லது ஆங்கில மொழிகளில் பதிவேற்றம் செய்வர். தேவைப்பட்டால் அதனை தமிழ், மாண்டரின் மொழிகளில் அப்பிரிவுச் செய்தியாளர்கள் மொழிபெயர்ப்புச் செய்து கொள்வர். அதேபோல் இதியர்கள் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு தமிழ்ப்பிரிவுச் செய்தியாளர்கள் செல்லும்போது அவர்கள் கூடுதலாக மலாய் – ஆங்கில மொழிகளிலும் (உரை, செய்தியாளர் சந்திப்புக் கூட்டம்) காணொலிகளைப் பதிவு செய்து கொள்வர்.
ஒருவேளை பிற மொழிச் செய்திகளுக்கும் இந்தக் குறிப்பிட்ட தகவல் தேவைப்பட வேண்டுமென்றால் அப்பிரிவுச் செய்தியாளர்கள் காணொலியைக் கொண்டு செய்திகளை உருவாக்குவர்.

கே: வெளி மாநிலங்களில் உள்ள செய்தியாளர்கள் எப்படி உடனுக்குடன் தாங்கள் சேகரிக்கும் செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர்?
ப: அவர்களுக்கும் எங்களின் செய்தி அறை செயல்முறையை பயன்படுத்த அனுமதி உள்ளது. அதே சமயம் மிக அவசரமான சுழ்நிலையில் வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமூக ஊடகங்கள் வழியும் அவர்கள் செய்திகளைப் பகிர்ந்து கொள்வர். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் ஒரு சில சமயங்களில் (புகைப்பட – வீடியோ பதிவு கலைஞர்கள் இல்லாத நிலையில்) நிருபர்களே களமிறங்கி தங்கள் கைபேசி உள்ளிட்ட தொழில்நுட்ப சாதனங்களின் வழி காணொலிகளைப் பதிவு செய்து நமக்கு அனுப்பி வைப்பர். இங்குள்ள தொழில்நுட்பத் தொகுப்பாளர்கள் அந்தக் காணொலிகளைத் தரம் உயர்த்துவர்.

கே: அவ்வப்போது செய்திகள் நேரடி ஒளிபரப்புச் செய்யப்படும்போது புதிய முக்கியச் செய்திகள் ஏதேனும் கிடைத்தால் என்ன செய்வீர்கள்?
ப: முதலில் அந்தச் செய்தியின் முக்கியத்துவத்தைக் கண்டறிவோம். மிக முக்கியமான செய்தி என்றால் அதனை எழுத்து வடிவில் தயார் செய்து செய்தி வாசிப்பாளரின் ஃபிராம்டரில் இணைத்து விடுவோம். புத்தம் புதிய செய்தி என்பதால் இதற்குப் புகைப்படங்கள், காணொலிகள் இடம்பெறாது. செய்தி வாசிப்பாளர்கள் நேரடி முறையில் இந்தச் செய்திகளை வாசிப்பர். பல சமயம் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

கே: பெர்னாமா டிவி சமூக வலைத்தளங்களிலும் பிரபலம் பெற்று வருகிறதே… அதுபற்றி கூற முடியுமா?
ப: நமக்குக் கிடைக்கும் செய்திகளின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தி அதனை மக்களுக்குத் தெரியப்படுத்தும் நோக்கில் அவ்வப்போது குறிப்பிட்ட செய்திகளின் தொகுப்பினை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோம். பொதுவாக குற்றச் சம்பவங்கள் வெளிநாட்டுச் செய்திகள் அதிகம் இதில் இடம்பெறும்.
கடந்த ஆண்டு சமூக வலைத்தளங்களில் எங்களின் காணொலிகள் 73 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த ஆண்டு ஜனவரி தொடங்கி ஜூன் மாதத்திலேயே 73 மில்லியனைக் கடந்துள்ளது. இது ஒரு நேர்மறையான முன்னேற்றமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here