சிவிஎஸ்கேஎல் அறவாரியத்திற்கு 10 லட்சம் ரிங்கிட் நன்கொடை மனிதநேயமிக்க மருத்துவர்களின் பங்களிப்பு

வசதிகுறைந்தவர்களுக்குத் தரமான இருதயநோய் சிகிச்சை அளிப்பதற்கு இப்பிராந்தியத்தின் முன்னணி இருதய சிகிச்சை மருத்துவமனையான சிவிஎஸ்கேஎல் (கார்டியக் வெஸ்குலர் செண்ட்ரல் கோலாலம்பூர்) நேற்று சிவிஎஸ்கேஎல் அறவாரியத்தைத் தொடங்கி மருத்துவத்துறையில் ஒரு புதிய மைல் கல்லைப் பதித்திருக்கிறது.
இதயத்திற்கு இதயமாக இருந்து சிகிச்சை அளிப்போம் என்ற கருப்பொருளுடன் இந்த நிபுணத்துவ மருத்துவமனையின் மருத்துவர்கள் இந்த மனிதநேயத் திட்டத்தை முன்னெடுத்திருக்கின்றனர்.
இம்மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் குழுவினர் இந்த அறவாரியத்தைத் தொடங்கியிருக்கின்றனர். இது ஒரு லாப நோக்கம் இல்லாத அறநிறுவனமாகும்.


பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில் நிபுணர்கள் இந்த அறங்காவலர் வாரியத்தில் இடம்பெற்றிருக்கின்றனர். இருதயநோய் சிகிச்சை அளிப்புக்கு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் திட்டங்களுக்கும் இருதயநோய் – ரத்த நாளங்கள் தொடர்பான நோய்கள் குறித்து அதீத விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முன்னேற்றம் அடைந்துவரும் மருத்துவத்துறையில் சாதிக்கவும் சிவிஎஸ்கேஎல் நோக்கம் கொண்டிருக்கிறது என்று இந்த அறவாரியத்தின் தலைவர் டான்ஸ்ரீ ரஸ்பால் சிங் தெரிவித்தார். இவர் முதலீட்டு நிறுவனங்களிலும் மூலப்பொருட்கள் பரிவர்த்தனையிலும் 40 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். சிவிஎஸ்கேஎல் அறவாரியத்தை அதன் அறங்காவலர் மேன்மை தங்கிய நெகிரி செம்பிலான் யாங் டி பெர்துவான் பெசார் துவாங்கு முஹ்ரிஸ் இப்னி அல்மர்ஹும் துவாங்கு முனாவிர், அறங்காவலர் வாரிய உறுப்பினர்களுடன் இணைந்து 30 ஜூலை 2022 அன்று அதிகாரப்பூர்வமாகத் தொடக்கிவைத்தார்.
மருத்துவமனையின் நிறுவனரும் தலைவருமான டான்ஸ்ரீ டாக்டர் யாஹ்யா பின் அவாங் தலைமையில் சிவிஎஸ்கேஎல் இருதயநோய் சிகிச்சைப் பிரிவு தலைவர் டத்தோ டாக்டர் ரோஸ்லி பின் முகமட் அலி 10 லட்ங்ம் ரிங்கிட்டிற்கான மாதிரி காசோலையை நேற்று ஒப்படைத்தார்.

இம்மருத்துவமனை தொடங்கப்பட்டு 4 ஆண்டுகளாகின்றன. 2021ஆம் ஆண்டில் மட்டும் சமூகக் கடப்பாடு முயற்சிகளின் கீழ் 545 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. இதற்காகத் திரட்டப்பட்ட நன்கொடை 4.15 மில்லியன் ரிங்கிட் ஆகும்.


ஏழைகளுக்கு உதவும் நோக்கத்தில் இந்த முயற்சி தீவிரப்படுத்தப்பட்டு இன்று இந்த அறவாரியம் தொடங்கப்பட்டிருக்கிறது. இன்னும் அதிகமான எண்ணிக்கையில் மக்களுக்கு உதவுவதற்கு கொடையாளர்கள் அவர்களால் இயன்ற தொகையை வழங்கி உதவுவார்கள் என்று டத்தோ டாக்டர் ரோஸ்லி நம்பிக்கை தெரிவித்தார்.
கோவிட்-19 தொற்றுப் பரவல் கொடூரத்திலிருந்து நாடு இயல்பு நிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்ற நிலையில் அதன் தாக்கத்தில் இருந்தும் பொருளாதாரப் பாதிப்புகளில் இருந்தும் மீட்சி பெற்று வருகின்றோம்.

இந்தக் காலகட்டத்தில் அரசாங்கத்திற்கு உறுதுணையாக இருந்து ஏழை மக்களுக்குச் சிறப்புமிக்க சிகிச்சைகளை வழங்குவதற்கு சிவிஎஸ்கேஎல் திட்டமிட்டிருக்கிறது.
கோவிட்-19 தொற்றுக் காலத்தில் நோயாளிகளுக்கு குறிப்பாக இருதயநோய் உள்ளவர்களுக்கு இம்மருத்துவமனை பெரிய அளவில் சிகிச்சை அளித் திருக்கிறது என்பதைச் சீட்டிக்காட்டிய டாக்டர் ரோஸ்லி, சீகாதார அமைச்சு குறிப்பாக அமைச்சர் கைரி ஜமாலு டின் இம்மருத்துவமனையின் பங்களிப்பை வெகுவாகப் பாராட்டி அங்கீகரித்திருக்கிறார் என்று சொன்னார்.
அதுமட்டுமன்றி உள் நாட்டு வருமானவரி வாரியம் இம்மருத்துவமனையின் மக்கள்நலச் சேவைகளுக்காக வழங்கப்படும் நன்கொடைகளுக்கு இவ்வளவு குறுகிய காலத்தில் வரிவிலக்கு அளித்திருப்பது இம்மருத்துவமனை சோதனைகளுக்கும் மக்கள்நலச் சேவைகளுக்கும் கிடைத்திருக்கும் மிகப்பெரிய அங்கீகாரம் என்று அவர் மேலும் சொன்னார்.


இன்றைய நிகழ்ச்சியில் சிவிஎஸ்கேஎல் அறவாரியத்தின் அறங்காவலர்களான டான்ஸ்ரீ ரஸ்பால் சிங், டான்ஸ்ரீ டாக்டர் ஜெமிலா மஹ்மூட், டத்தோ கொடிஜா பிந்தி அப்துல்லா, டத்தோ அஸாட் பின் கமாலுடின், வூன் செங் சுவான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேலும் இம்மருத்துவமனையின் இருதய சிகிச்சைப் பிரிவு நிபுணர்களான டத்தோ டாக்டர் தமிழ்ச்செல்வன் முத்துசாமி, டத்தோ டாக்டர் ரோஸ்லி முகமட் அலி, டாக்டர் சுரேன் துரைசிங்கம் மேலும் பல மருத்துவர்களும் கலந்துகொண்டனர்.

சிவிஎஸ்கேஎல் அறவாரியத்தைத் துவாங்கு முஹ்ரிஸ் உடன் இணைந்து அதன் அறங்காவலர்கள் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கிவைக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here