ரந்தாவ் பாஞ்சாங், ஆகஸ்ட் 11 :
நேற்று, பண்டார் கெத்தரே, கோத்தா பாருவின் போக்குவரத்து விளக்கு சந்திப்பில், கிளாந்தான் ரோயல் மலேசியன் சுங்கத்துறையினர் (JKDM) மேற்கொண்ட சோதனையில், லோரியில் கொண்டு வரப்பட்ட RM14,500 மதிப்புள்ள 1,450 கிலோகிராம் கெத்தும் இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கிளாந்தான் சுங்கத்துறை இயக்குநர் முகமட் நசீர் டெராமன் கூறுகையில், அதிகாலை 4 மணியளவில் நடந்த சம்பவம் தொடர்பில், தமது துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், 22 வயதான உள்ளூர் ஆடவரால் ஓட்டிச் செல்லப்பட்ட லோரியை தமது துறையினர் தடுத்து நிறுத்தினர் என்றார்.
அதனைத் தொடர்ந்து, வாகனத்தை முழுமையான சோதனை செய்ததில், கெத்தும் இலைகள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 145 கருப்பு பிளாஸ்டிக் பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
“முதற்கட்ட விசாரணையின் முடிவுகள், கெத்தும் ‘இலைகள் கெடாவில் இருந்து கிளாந்தான் மாநிலத்திற்கு அனுப்பப்பட்டது’ என்றும் அதிகாரிகளின் சோதனையில் இருந்து தப்பிக்க, அவர்கள் அதிகாலையில் கெத்தும் இலைகளை ஏற்றிக்கொண்டு வந்ததாக கூறினார்.
“விஷம் சட்டம் 1952 இன் பிரிவு 30 (3) இன் கீழ் விசாரணைக்காக லோரி மற்றும் அனைத்து கெத்தும் இலைகளும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், லோரி ஓட்டுநரும் கைது செய்யப்பட்டார்,” என்று அவர் இன்று, ரந்தாவ் பாஞ்சாங் சுங்கத்துறை அமலாக்க அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
மேலும் தும்பாட்டைச் சேர்ந்த சந்தேக நபர், கெத்தும் இலை விநியோகத்தில் ஈடுபடும் கும்பலின் உறுப்பினராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதோடு, அவர் மேலதிக விசாரணைக்கு உதவுவதற்காக ஆகஸ்ட் 9 முதல் 12 வரை நான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டார் என்றார்.