90 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கான 24 மணி நேரப் பாதுகாப்பு இன்று முதல் நீட்டிக்கப்படுகிறது -டத்தோஸ்ரீ ரமணன்

1969ஆம் ஆண்டு தொழிலாளர் சமூகப் பாதுகாப்புச் சட்டத்தின் (சட்டம் 4) கீழ் பயனர்களாக உள்ள 90 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இன்று முதல் வேலை சம்பந்தமில்லாத விபத்துகளின் பாதிப்புகளிலிருந்து இயல்பாகவே முழுமையாகப் பாதுகாக்கப்படுகிறார்கள் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.மலேசியாவில் பொது விடுமுறை நாட்கள், சிறப்பு விடுமுறை உட்பட 24 மணி நேரப் பாதுகாப்புத் திட்டம் ஒரு பரந்த சமூகப் பாதுகாப்பு வலையமைப்பை வழங்குகிறது.

சமூகப் பாதுகாப்பு அமைப்பின் (பெர்கெசோ) கீழ் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது முதலாளி அல்லது ஊழியர் புதிதாகப் பதிவு செய்யத் தேவையின்றி தற்போதுள்ள அனைத்து முறைசார்ந்த ஊழியர்களுக்கும் இயல்பாகவே பயனளிக்கும்.புதிதாகப் பணியமர்த்தப்பட்டு ஜூன் 1, 2026க்குப் பிறகு பணியில் சேரும் நபர்களுக்கு முதலாளிகள் பெர்கெசோ அமைப்பின் மூலம் தற்போதுள்ள நடைமுறையின்படி ஊழியரைப் பதிவு செய்ய வேண்டும் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இதனிடையே லிண்டுங் 24 ஜாம் பங்களிப்பு முழுவதுமாக ஊழியரால் ஏற்கப்படுகிறது என்றும் பங்களிப்பு நோக்கங்களுக்காக 6,000 ரிங்கிட் என்ற சம்பள வரம்பிற்கு உட்பட்டு குறிப்பட்ட நடைமுறைகளின்படி இது படிப்படியாகச் செயல்படுத்தப்படுகிறது என்றும் டத்தோஸ்ரீ ரமணன் விளக்கினார்.தொடக்கமாக, லிண்டுங் 24 ஜாம் திட்டத்திற்கான பங்களிப்பு விகிதம் மாதச் சம்பளத்தில் 0.75 விழுக்காடு ஆகும். எனவே ஊழியரின் சம்பளப் பிடித்தத்தை நிர்வகிப்பதற்கும் ஒவ்வொரு மாதமும் பெர்கெசோவிற்கு இத்திட்டத்தின் பங்களிப்பைச் செலுத்துவதற்கும் முதலாளியே பொறுப்பாவார் என்று அவர் கூறினார்.

பாதுகாப்பின் தொடர்ச்சியை எந்த இடையூறும் இன்றி உறுதி செய்வதற்கும் முதலாளிகள், ஊழியர்கள் இணங்குவதை எளிதாக்குவதற்கும் பங்களிப்பு செலுத்துவது தொடர்ச்சியாகச் செயல்படுத்தப்பட வேண்டும்.இதன் மூலம் லிண்டுங் 24 ஜாம் திட்டத்தின் கீழ் பங்களிப்பாளர்களின் வாழ்வாதாரம், நலனுக்காக மருத்துவப் பலன்கள், தற்காலிக ஊனமுற்றோர் பலன்கள், நிரந்தர ஊனமுற்றோர் பலன்கள்,- சார்ந்தோர் பலன்கள் உட்பட எட்டுப் பலன்களை பெர்கெசோ வழங்குகிறது.தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு வலையை வலுப்படுத்துவதில் அனைத்துலக தொழிலாளர் அமைப்பின் (ILO) பரிந்துரைகள், அனைத்துலக சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப இந்தப் பாதுகாப்பின் விரிவாக்கம் அமைந்துள்ளது என்று டத்தோஸ்ரீ ரமணன் விவரித்தார்.

உண்மையில் பெர்கெசோவால் முன்னெடுக்கப்பட்ட சமீபத்திய முயற்சிகள் நாட்டின் தொழிலாளர்களின் நலன், நல்வாழ்வை உறுதி செய்வதில் மடானி மலேசியாவின் அபிலாஷைகளுக்கு ஆதரவளிப்பதுடன் மலேசியாவில் உள்ள சமூகப் பாதுகாப்பு வலையை மிகவும் விரிவானதாகவும் ஆற்றல்மிக்கதாகவும் தற்போதைய தொழிலாளர் சந்தையின் யதார்த்தத்திற்குப் பொருத்தமானதாகவும் உருவாக்கியுள்ளன என்று அவர் மேலும் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here