மலேசியத் தகவல் துறை அறிவோம் – தெளிவோம்

மலேசியத் தகவல் துறை குறித்து நம்மில் பலரும் அறிந்திருப்போம். தொடர்புத்துறையினை வலுப்படுத்தும் நோக்கில் இந்த துறையானது தொடர்பு, பல்லூடக அமைச்சின் கீழ் இயங்கி வருகின்றது.

இந்நிலையில் இந்த துறை குறித்த பல தகவல்களை ஊடகம், கூட்டறவு தொடர்புப் பிரிவு இயக்குநர் டத்தோ சிவபாலன் எதிர்மன சிங்கம் மக்கள் ஓசையுடன் பகிர்ந்து கொள்கின்றார்.

இவர் 1991ஆம் ஆண்டு செய்தியாளராகத் தன் பணியைத் தொடங்கினார். அதன் பிறகு பொதுப்பணி, மனிதவள அமைச்சர்களின் ஊடகச் செயலாளராகவும் சுகாதார அமைச்சு, கல்வியமைச்சு, உயர்கல்வி அமைச்சுகளிலும்  பணியாற்றியுள்ளார்.

 கே: மலேசியத் தகவல் துறையின் இலக்கு, கொள்கை குறித்து கூற முடியுமா?

  ப: பல வகையான தொடர்பு அம்சங்களின் வழி அரசாங்கக் கொள்கைகளை மக்களுக்குத் தெரியப்படுத்துவது இந்த துறையின் இலக்காகும். அதேபோல் அரசாங்கச் செயல்பாடுகள், திட்டங்கள், கோட்பாடுகளின் மீது மக்களுக்கு உள்ள விழிப்புணர்வையும் புரிந்துணர்வையும் அதிகரிக்கச் செய்வதும் இந்த துறையின் கொள்கைகளுள் ஒன்றாகும்.

  தொடர்ந்து அரசாங்கச் செயல்பாடுகள், திட்டங்கள், கொள்கைகளை வெற்றி பெறச் செய்வதில் மக்களின் பங்களிப்பு, ஈடுபாடு, ஆதரவினை அதிகரிப்பதும் அறிவுமிக்க – ஒருமைப்பாடு கொண்ட – உயர்நெறிப் பண்புகளை அமல்படுத்திக்கொள்ளும் சமூகத்தை உருவாக்க உதவுவதும் இந்தத் துறையின் கொள்கைகளாகும்.

 கே: மலேசியத் தகவல் துறையின் செயல்பாடுகள் என்னென்ன?

  ப: முதலாவதாக தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்களின் ஆதரவு, புரிந்துணர்வை மேலோங்கச் செய்றதற்கு நாட்டின் கொள்கைகள், கோட்பாடுகள் குறித்த தகவல்களையும் மக்களிடையே பகிர்வதாகும்.

  இரண்டாவதாக தொடர்ந்து பலவகையான நேரடி தொடர்பு செயல்பாடுகள் வழி அதன் நல்லுறவு வரம்பினை விரிவாக்கம் செய்வதாகும்.

  மூன்றாவதாகச் சமூக ஊடகங்களின் வழி நாட்டின் கொள்கைகள் – கோட்பாடுகள் குறித்த ஆக்கப்பூர்வமான நவீன உள்ளடக்கங்களை மேம்படுத்துவதாகும். அதேபோல் 4ஆவதாக மக்களுக்கான அரசாங்கச் சேவை, வலிமையை இன்னும் அதிகரிப்பதற்குத் தற்போதைய விவகாரங்களைக் கண்காணித்து அவற்றை நிர்வகிப்பதாகும்.

  ஐந்தாவதாக அரசாங்க இலாக்களுக்குப் பொது தொடர்பு, ஊடக மேலாண்மை சேவைகளை ஏற்படுத்தித் தருவதாகும். 6ஆவதாகத் தேசியக் கொள்கைகள் குறித்த காணொலி வடிவிலான படைப்புகளை உருவாக்குவதாகும்.

  7ஆவதாக மனிதவளம், பொருளாதாரம், மேம்பாடு, தொழில்நுட்பச் சேவை ஆகிய அம்சங்களில் நிர்வாகம் – மேலாண்மை ஆதரவு சேவையை முன்னிருத்துவதாகும்.

 கே: மலேசியத் தகவல் துறையின் வியூகங்கள் குறித்து கூற முடியுமா?

  ப: எங்கள் துறையானது குறிப்பிட்ட வியூகங்களின் வாயிலாகத் தொடர்பினைக்

கட்டமைத்து தகவல்களைப் பகிர முனைகின்றது.  மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவது, கூட்டமைப்பு – ஒன்றிணைந்து செயல்படுவது, களத்தில் இறங்குவது, தரவுகளைப் பரிசீலனை – ஆய்வு செய்வது, ஆகியவை அந்த வியூகங்களாகும்.

கே: இந்த வியூகங்களை விளக்குங்கள்?

ப: தேசிய தத்துவம், கொள்கைகள், செயல்பாடுகள் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவது முதல் கொள்கையாகும். தொடர்ந்து விரிவான தகவல் பரிமாற்றத்தின் இலக்கை நோக்கி குறிப்பிட்ட தரப்பினருடன் இணைந்து தொடர்பு வரம்புகளைக்

கட்டமைப்பது 2ஆவது வியூகமாகும்.

  மூன்றாவதாகக் குறிப்பிட்ட தரப்பினரை அணுகுவதற்கு (புறநகர் – உட்பகுதியில் வசிப்பவர்கள்) களத்தில் நேரடியாக இறங்கி செயல்பாடுகளை முன்னெடுப்பதாகும்.

  4ஆவதாகத் தற்போதைய விவகாரங்களை எதிர்கொள்வதற்கும் அரசாங்கத் தகவல்கள் பரிமாற்றத்தினை வெற்றி பெறச் செய்வதற்கும் தொடர்பு வியூகத் திட்டத்தை வரையறுப்பதில் அடிப்படையாக விளங்குவதற்கு முக்கியத் தரவுகளைச் சேகரித்து ஆய்வு செய்வதாகும்.

கே: இந்தத் துறையில் இடம்பெற்றிருக்கும் பிரிவுகள் குறித்து கூறுங்கள்?

ப: முதலாவதாகத் தொடர்புச் சேவை – சமூக மேம்பாட்டுப் பிரிவாகும். இந்தப் பிரிவானது நேரடித் தொடர்பு முன்னெடுப்பின் வழி தகவல்கள் பரிமாற்றத் திட்டத்தை வரையறுத்து ஒருங்கிணைத்து அதற்கான வியூகங்களை நிர்வகிக்கும் பொறுப்பைக் கொண்டதாகும்.

தொடர்ந்து விவகார மேலாண்மை  – நடவடிக்கைப் பிரிவாகும். இந்தப் பிரிவு மக்களுக்கு அரசாங்கச் சேவையின் ஆக்கப்பூர்வத் தன்மையை உயர்த்துவதற்குத் தற்போதைய விவகாரங்களைக் கண்காணித்து மேலாண்மை செய்யும் பொறுப்பினைக் கொண்டுள்ளது.

3ஆவதாகத் தேசியக் கொள்கைகள் –

கோட்பாடுகள் குறித்து அச்சு – மின்னியல் படைப்புகளை உருவாக்கும் தேசியக் கொள்கை வெளியீட்டுப் பிரிவு செயலாற்றுகிறது.

4ஆவது ஊடகம் – கூட்டறவு தொடர்புப் பிரிவாகும். இப்பிரிவு அரசாங்க இலாகாக்களுக்கு பொதுத் தொடர்பு பேச்சுவார்த்தை – ஊடக மேலாண்மைச் சேவையை ஏற்படுத்தித் தருகிறது.

5ஆவதாக இணையவெளி ஊடகப் பிரிவாகும். இந்தப் பிரிவு சமூக ஊடகங்கள் வாயிலாகத் தேசியக் கொள்கைகள் குறித்த தகவல்களைப் பரிமாறுவதற்கும் ஆக்கப் பூர்வமான விளக்கப்படம், காணொலி, இதர படைப்புகளை மேம்படுத்தவும் இயங்குகிறது.

6ஆவதாக ஆசியான் அளவிலான ஒப்பந்தத்தின் கீழ் தொடர்பு நல்லுறவுக்கான இணைப்புத் திட்டங்களை வரையறுத்து ஙெ்யல்படுத்தும் அனைத்துலகத் தொடர்புப் பிரிவு உள்ளது.

 7ஆவதாக ஒளி தொடர்பு, கலைப் படைப்புப் பிரிவு இயங்குகிறது. அரசாங்கக் கொள்கைகளையும் தகவல்களையும் ஒளி தொடர்பின் வாயிலாக கண்காட்சி, பல்லூடகம், வரைக்கலை உள்ளிட்ட இலக்கவியல் அம்சங்களின் வழி விளம்பரப்படுத்தவும் தேசியப் புகைப்படக் காப்பகத்தைப் பராமரிக்கும் அதிகாரப்பூர்வ புகைப்படக் கலைஞர் சேவையை ஏற்படுத்தித் தரவும் இந்தப் பிரிவு உள்ளது.

8ஆவதாக இலக்கவியல் தொழில்நுட்பப் பிரிவு. இப்பிரிவு, தகவல் துறை நடவடிக்கைகளுக்கும் திட்டங்களுக்கும் ஆதரவு  அளிக்கும் வகையில் இலக்கவியல் மேம்பாட்டுத் திட்டங்களை வரையறுத்து மேலாண்மை செய்து அதனை ஒருங்கிணைக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளது.

தொடர்ந்து கொள்கை – வியூகத் திட்டமிடல் பிரிவு இயங்குகிறது. இப்பிரிவு அமைச்சு/ துறைகளின் முதன்மைக் கூட்டங்களின் செயல்பாடுகளையும் அமைச்சின் கொள்கைகள் அமலாக்க விவகாரச் செயல்பாடுகளையும் திட்டமிட்டு நிர்வகித்து ஒருங்கிணைக்கும் பணிகளைச் செய்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here