ஜோகூர் பாரு, ஆகஸ்ட் 23 :
ஜோகூர் மாநிலத்தின் வார இறுதி நாட்களை மறுபடியும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றும் மாநில அரசின் முன்மொழிவு குறித்து, தான் அவசரமாக முடிவெடுக்கப் போவதில்லை என்று ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் அல்மர்ஹூம் சுல்தான் இஸ்கந்தர் இன்று தெரிவித்தார்.
“இந்த முடிவை நான் அவசரமாக எடுக்க விரும்பவில்லை, ஏனெனில் நான் இதை முழுமையாக சிந்திக்க வேண்டும். மாநில அரசின் முன்மொழிவிலுள்ள அனைத்து தரப்பினருக்குமான நன்மை மற்றும் தீமை தொடர்பான அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொள்வேன், அதே நேரத்தில் இந்த விஷயத்தில் அனைத்து கண்ணோட்டங்களிலும் பார்க்க வேண்டும் என்றார்.
“இந்தப் பிரச்சினையை அரசியல் ஆக்கவேண்டிய எந்த தேவையுமில்லை. தற்போது மக்கள் நலனுக்காக ஜோகூரின் பொருளாதார வளர்ச்சியில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
ஜோகூர் நலனுக்கான சிறந்த முடிவாக இது இருக்கும் என்று நான் முழுமையாக உறுதியாகவும் நம்பிக்கையுடனும் இருக்கும்போது மட்டுமே இந்த விஷயத்தில் நான் எனது அறிவிப்பை வெளியிடுவேன் என்றும், இது தொடர்பில் தன்னை யாரும் வற்புறுத்தவோ அல்லது ஊகங்களை வெளியிடவோ வேண்டாம் என்றார்.
மாநில அரசு எனக்கு எந்த முன்மொழிவையும் அனுப்பலாம், ஆனால் எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் அவற்றை முழுமையாகப் பரிசீலிப்பேன், ”என்று அவரது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.