கோலாலம்பூர், ஆகஸ்ட் 24 :
SRC international Sdn Bhd வழக்கில், கூட்டரசு நீதிமன்றம் விதித்த தீர்ப்புக்கு எதிராக நஜிப் தொடுத்திருந்த அவரது மேல்முறையீட்டை ரத்து செய்து, அவரது தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உறுதி செய்ததை அடுத்து, நஜிப் காஜாங் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
அவருக்கு இந்த வாரம் அரச மன்னிப்பு கோரப்படாவிட்டால், தற்போதைய அரசாங்கத்திற்கான ஆதரவை அம்னோ திரும்பப் பெற வேண்டும் என்று டத்தோஸ்ரீ நஜிப் அப்துல் ரசாக்கின் ஆதரவாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

“நாங்கள் இந்த விவகாரத்தில் நடப்பு பிரதமர் இஸ்மாயிலை தலையிடக் கோருகிறோம், மேலும் இந்த வார இறுதிக்குள் நஜிப்பிற்கு அரச மன்னிப்பைக் கோருகிறோம்.
“இல்லையெனில், அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தற்போதைய அரசாங்கத்திற்கான ஆதரவை வாபஸ் பெற வேண்டும் மற்றும் நாடாளுமன்றத்தை உடனடியாக கலைக்க வலியுறுத்த வேண்டும்” என்று பெர்துபுஹான் ஜாலினன் பெர்பாத்துவான் நெகாரா மலேசியாவின் தலைவர், சையிட் முகமட் இம்ரான் சையட் அப்துல் அஜிஸ் கூறியதாக தி மலேசியன் இன்சைட் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்தானா நெகாராவின் செய்தி தொடர்பு அதிகாரி முகமட் ஹுஸ்னி யூசோப்பிடம், நஜிப்பிற்கு அரச மன்னிப்பைக் கோரும் மூன்று பக்க மகஜரை சமர்ப்பித்த பின்னர், அவரை வெளியில் செய்தியாளர்கள் சந்தித்தனர்.
பிற்பகல் 2 மணியளவில் கோலாலம்பூரில் உள்ள அரச அரண்மனைக்கு 300க்கும் மேற்பட்ட நஜிப்பின் ஆதரவாளர்களை சையிட் முகமட் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.









