பொய்த் தகவல்கள்: விபரீதங்களும் தவிர்ப்பதற்கான செயல்பாடுகளும்

இன்றைய நவீனக் காலகட்டத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு உள்ள ஆன்லைன் அகப்பக்கங்களும் சமூக வலைத்தளப் பக்கங்களும் எந்த அளவு நல்ல விவகாரங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றவோ அதேபோல் தீய அல்லது போலி விவகாரங்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில் இந்தப் பொய்த் தகவல் விவகாரமானது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி சர்ச்சையை விளைவிக்கும் வல்லமையைக் கொண்டதாகும்.

தினந்தோறும் பல போலி தகவல்களை நம்பி மக்கள் ஏமாற்றம் அடைவது குறித்த சம்பவங்களையும் நாம் நேரடியாகவோ  அல்லது மறைமுகமாகவோ தெரிந்து கொள்கின்றோம்.

இந்தப் போலி தகவல்கள் பரிமாற்றம் – அதனைத் தடுப்பதற்கு  முன்னெடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் மக்கள் ஓசையிடம் பகிர்ந்துள்ளது.

கே: இந்த பொய்த் தகவல்கள்  பரிமாற்றத்தைத் தடுப்பதற்கு நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள சட்ட விதிமுறைகள் குறித்து கூற முடியுமா?

ப:  மலேசியாவில் இந்தப் பொய்த் தகவல்களால் மக்கள் மத்தியில் எந்தவொரு குழப்பமும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய சில சட்ட விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக 1998 தொடர்பு மற்றும்

பல்லூடகச் சட்டம், குற்றவியல் சட்டம் போன்ற சட்ட விதிமுறைகள் பொய்த் தகவல்களை உருவாக்குவதையும் அதனைக் பரப்பும் நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த அமல்படுத்தப்படுகின்றது.

ஆனாலும் இந்தச் சட்ட விதிமுறைகளானது கால மாற்றத்திற்கு ஏற்ப வழக்க நிலையில் இருப்பதை உறுதி செய்ய அதனைப் புதுப்பிக்கும் – தரம் உயர்த்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.

இதனையடுத்து 1998 தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் செக்ஷன் 233  சட்ட விதியானது ஆபாசம், போலி,  சர்ச்ங்கை்குரிய விவகாரங்களை  மின்னியல் தொடர்புத் தளம், சமூக வலைத்தளம் போன்ற இணையப் பயன்பாட்டில் பரப்பப்படுவதைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டமாகும்.

இந்தச் சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 50 ஆயிரம் ரிங்கிட்டிற்கு மேற்போகாத அபராதத் தொகை, ஓராண்டிற்கு மேற்போகாத சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படும். அதேபோல் பொது அமைதிக்குக் களங்கம் விளைவிக்கக்கூடிய பொய்த் தகவல்களைப் பரப்பும் தரப்பினரைக் கட்டுப்படுத்துவதற்கு குற்றவியல் சட்டம் செக்ஷன் 505 (பி) அமலாக்கத்தில் உள்ளது.

இந்தச் சட்டவிதியின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அபராதம், 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம். அதேபோல் விசாரிக்கப்படும் சம்பவங்களின் தன்மைகள் அடிப்படையில் இதர சட்ட விதிமுறைகளும் இந்தப் பொய்த் தகவல் குற்றத்தை ஒடுக்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்றது.

கே: மலேசியாவில் பொய்த் தகவல் பரப்புதல் தொடர்பிலான சம்பவங்களின் எண்ணிக்கை குறித்து தற்போதைய தரவினை விவரிக்க முடியுமா?

ப: கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்கி இவ்வாண்டு ஜூன் 30ஆம்

தேதி வரையில் பொய்த் தகவல் தொடர்பிலான 99 சம்பவங்கள் குறித்து மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் பொதுவான விசாரணைகளை (பல்வேறு விவகாரங்களை உட்படுத்தியது) மேற்கொண்டுள்ளது.

அதில் ஆறு சம்பவங்கள் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளன. நாட்டில் வாழும் பல இன மக்களின் ஒருமைப்பாட்டிற்குப் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய விவகாரங்கள் உள்ளிட்ட பொய்த் தகவல் தொடர்பிலான சம்பவங்கள் குறித்து பெறப்படும் பொதுப் புகார்களுக்கு ஏற்ப ஆணையம் இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது.

இது தவிர சமூகத்தில் பதற்றம் ஏற்படுத்தக்கூடிய கோவிட்-19 வைரஸ் தொற்று தொடர்பிலான  பொய்த் தகவல்கள் குறித்து 2020ஆம் ஆண்டு தொடங்கி இவ்வாண்டு ஜூன் 30ஆம் தேதி வரையில் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமும் அரச மலேசியப் போலீஸ் படையும் 407 விசாரணை அறிக்கைகளைத் திறந்துள்ளன.

கே: பொதுவாக இந்தப் பொய்த் தகவல்கள் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்க எவ்வளவு காலம் பிடிக்கும்? அது தொடர்பில் முன்னெடுக்கப்படும் செயல்பாடுகள் என்னென்ன?

ப: மக்கள் மத்தியில் குழப்பத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தும் நிலையிலான பொய்த் தகவல்களைப் பரப்பும் எந்தவொரு தரப்பினர் மீதும் அரசாங்கம் பாரபட்சம் காட்டாது.

அதிலும் சர்ச்சையை உருவாக்கி நாட்டின் நிலைத்தன்மைக்குப் பாதகம் ஏற்படுத்தக்கூடிய இந்தப் பொய்த் தகவல்கள் பரப்பப்படுவதை அரசாங்கம் கடுமையாகக் கருதுகிறது.

இந்தப் பொய்த் தகவல்களால் பாதிக்கப்பட்ட தரப்பினர் வழங்கும் புகாரின் அடிப்படையில் நடவடிக்கைகள் தொடரப்படுகின்றன. பெறப்படும் புகார்கள் மதிப்பீடு செய்யப்பட்டு அதில் சட்ட அமலாக்கத்திற்கு எதிராகக் குற்றச்செயல்கள் இருப்பது கண்டறியப்பட்டால் விசாரணை தொடங்கப்படும்.

ஒரு குறிப்பிட்ட சம்பவம் குறித்த விசாரணையில் கிடைத்த தகவல்கள், தரவுகள் அடிப்படையில் இந்தக் குற்றத்திற்கு எதிராக தண்டனை கிடைக்கும் வரையிலான செயல்பாடுகளுக்குக் கால அவகாசம் அமையப்பெறும்.

கே: இந்தப் பொய்த் தகவல் விவகாரம் பூதாகரமாக உருவெடுப்பதை எதிர்கொள்ள மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் முன்னெடுக்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் என்ன?

ப: முதலில் மலேசிய சட்டத்தை மீறும் உள்ளடக்கங்களை களைவதற்கு ஃபேஸ்புக், டுவிட்டர், கூகுள் போன்ற சமூக வலைத்தள மேம்பாட்டாளர்களுடன் இணைந்து செயலாற்றப்படுகின்றது. வெளிநாடுகளில் உள்ள சமூக வலைத்தள மேம்பாட்டாளர்கள் சமூகத்தின் விதிமுறைகள், வரையறைகளுக்கு ஏற்ப ஒன்றிணைந்து பல நடவடிக்கைகள் மேற்கொள்கின்றன.

அதோடு கோவிட்-19 தொடர்புடைய பொய்த் தகவல்களின் உள்ளடக்கம் சமூக மேம்பாட்டாளர்களால் அழிக்கப்படும்.

அடுத்ததாக பொதுமக்களுக்கு இந்தப் பொய்த் தகவல் குறித்த எச்சரிக்கை நோட்டீஸ் தொடர்ந்து வழங்கப்படுகின்றன. மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் வழி அமைச்சு பொதுமக்களுக்கு இந்த எச்சரிக்கை – தகவல்களை வழங்குகின்றது.

குறிப்பாக நாட்டின் எழுத்துப்பூர்வ சட்ட விதிமுறைகளின் அடிப்படையில் இந்தப் பொய்த் தகவல்கள் பரப்பப்படுவது குற்றம் என எச்சரிக்கையுடன் தெரிவிக்கப்படுகிறது.

அதே சமயம் அமலாக்க நடவடிகைகளை விடுத்து நாடு தழுவிய அளவில் விழிப்புணர்வு நிலையிலான பல நடவடிக்கைகளையும் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் முன்னெடுத்து வருகின்றது. சமூக வலைத்தளங்களை தவறான முறையில் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் நன்னெறி அம்சம் ரீதியாகவும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்தச் செயல்பாடுகள்

முன்னெடுக்கப்படுகின்றன. அதேபோல் பொய்த் தகவல்கள் செய்திகள் தொடர்ந்து பகிரப்படுவதைத் தவிர்ப்பதற்கு இணையத்தளவாசிகள் இன்னும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனும் நோக்கத்தையும் இந்நடவடிக்கைகள் விதைக்கின்றன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here