கேள்வி: பொய்த் தகவல்களைக் கட்டுப்படுத்துவதில் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து விளக்க முடியுமா?
பதில் : சட்ட அமலாக்கத்தை எடுத்துக் கொண்டால், தற்போது 1998 தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் – குற்றவியல் சட்டம் போன்றவை இந்த பொய்த் தகவல் விவகாரங்களுக்கு அமல்படுத்தப்படுகின்றன.
ஆனாலும், அந்த சட்டங்கள் காலத்திற்கு ஏற்ப இருப்பதனை உறுதி செய்ய அவ்வப்போது சட்டத் திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் காண்பது உட்பட ஒரு சில அம்சங்ளில் தொழில்நுட்ப – திறன் அடிப்படையிலும் மேம்பாட்டு அல்லது புதுப்பிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
கே: பொய்ச் செய்திகள் விவகாரத்தை எதிர்கொள்வதில் sebenarnya.my தளம் எந்தளவு உறுதுணையாக இருக்கின்றது?
ப: ஆன்லைன் தளங்கள், சமூக வலைத்தளங்கள் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் நொடிப் பொழுதில் பொய்த் தகவல் பரவலும் பெருமளவில் ஏற்படக்கூடும் என்பது புலப்பட்டுள்ளது.
பொய்த் தகவல் பரிமாற்றமானது வழக்கமான ஒன்றாகிவிட்ட நிலையில் வாடிக்கையாளர்கள் அந்த தகவல்களை உறுதி செய்வது அவசியமாகின்றது. குறிப்பாக, தரவுகள் ஆய்வுசெய்யும் சேவை இங்கு தேவைப்படுகின்றது. இதன்அடிப்படையில்தான் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த sebenarnya.my தளம் உருவாக்கப்பட்டது. இந்த தளத்தின் வாயிலாக 2சி அம்ங்ங்கள் முன்வைக்கப்படுகின்றன.முதலில் ‘check’ உறுதி செய்யப்படாத தரவுகளை முதலில் பரிங்சோதனை செய்வது அவசியமாகின்றது.அதனை அடுத்து ‘channel’. இது உறுதிப் படுத்தப்படாத எந்தவொரு செய்திகளையும் sebenarnya.my அகப்பக்கத்தில் பகிர்வதன் வழி நாங்கள் அதன் உண்மைத் தன்மையை சம்பந்தப்பட்ட இலாகாக்களோடு இணைந்து உறுதிப்படுத்துவோம்.
கே: பொய்த் தகவல்களை அடையாளம் காணும் வழி முறைகளைப் பகிர முடியுமா?
ப: முதலில் ஒரு செய்தி அல்லது தகவல்களை படிக்கும்போது அது எந்தச் செய்தி தளத்தில் பகிரப்பட்டுள்ளது என்பதை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட செய்தித் தளங்களில் வரும் செய்திகளை ஏற்றுக் கொண்டு பகிர்வது ஆக்கப்பூர்வமான நடவடிக்கையாகும்.
அதே சமயம் அடையாளம் தெரியாத தளங்களில் பகிரப்படும் தகவல்களை முதலில் ஆராய்ந்து அதன் பின்னர் பகிர்வது அவசியமாகின்றது.
இதனை அடுத்து கவனத்தை ஈர்க்கக்கூடிய ஆக்கப்பூர்வமான தலைப்புகள் இருந்தால் முதலில் அந்த செய்தி அல்லது தகவல்களை முழுமையாகப் படித்து உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர்தான் அதனைப் பகிர்வது குறித்து முடிவெடுக்க வேண்டும்.
ஒரு சில சமயங்களில் முதன்மை தலைப்பானது அந்த செய்தியிலுள்ள சாராம்சத்தை முழுமையாக வெளிக்காட்டாது. அடுத்தது புகைப்படம், காணொலிகளைப் பரிசீலனை செய்வதாகும்.
பொதுவாக பொய்த் தகவல்கள் அடங்கிய செய்திகளை மாற்றி வடிவமைக்கப்பட்ட புகைப்படங்கள், காணொலி பதிவுகள் இருக்கக்கூடும். ஒரு சில சமயம் அசல் புகைப்படங்கள் இருந்தாலும் அது வேறிடத்திலிருந்து திருடப்பட்டதாக இருக்கக்கூடும்.
எனவே, அந்த அம்சங்களையும் பரிசீலனை செய்து உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. மேலும், சம்பந்தப்பட்ட செய்திகளைப் படிக்கும் முன்னர் வெளியிடப்பட்டதேதியை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். பொதுவாக பொய்த் தகவல்கள் அடங்கிய செய்திகளில் தேதிகள் ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் இருக்கும் அல்லது மாற்றப்பட்டு இருக்கும். அது மட்டுமல்லாது, இதர செய்திகளையும் உறுதிப்படுத்திக் கொள்வது அவசியமாகின்றது.
குறிப்பிட்ட தளத்தில் ஒரு செய்தியை படிக்கும்போது அதில் சந்தேகம் இருந்தால் இதர செய்தித் தளங்களில் அந்த செய்தியைப் பதிவிட்டுள்ளார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.