கோலாலம்பூரில் விவேக நகர கண்காட்சி – அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

தலைநகர் கோலாலம்பூரில் அடுத்தாண்டு செப்டம்பர் 17ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை ஸ்மார்ட் சிட்டி எக்ஸ்போ எனும் விவேக நகர் கண்காட்சியை மலேசியா நடத்துகிறது. இந்த கண்காட்சியை நடத்தும் முதல் தென்கிழக்காசிய நாடாக மலேசியா திகழ்கிறது என்று டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறினார். மலேசியா புத்தாக்கத்திலும் டிஜிட்டல் நகர நீடித்த வளர்ச்சியிலும் முனைப்பு காட்டி வருவதை இந்த கண்காட்சி எடுத்துரைக்கும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஆசியானுக்கு தலைமை வகிக்க போகும் நாடு எனும் முறையில் மலேசியாவின் நிலை இதன் வழி வலுப்படும் என்றும் அவர் மேலும் சொன்னார். டிஜிட்டல் நகர தொழில் நுட்பங்களில் தனது ஆற்றலை தொடர்ந்து மேம்படுத்தி வரும் மலேசியாவின் மிக முக்கியமான அடுத்தகட்ட நடவடிக்கையாக இந்த கண்காட்சி திகழ்கிறது என்றும் அவர் சொன்னார். இதற்கான ஏற்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் அதி நவீன தொழில் நுட்பங்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

நகர்புற எதிர்கால வாழ்க்கைத் தொடர்பில் அர்த்தமுள்ள கலந்துரையாடலுக்கான ஒரு களமாகவும் அனைத்துலக பங்கேற்பாளர்களுக்கு இந்த கண்காட்சி அமையும். விவேக நகரங்களை நிர்மாணிக்க உலகம் முழுவதும் இருந்து நிபுணர்களையும் வல்லுநர்களையும் மலேசியா கொண்டு வருவதற்கு 2025 கோலாலம்பூர் ஸ்மார்ட் சிட்டி கண்காட்சி அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். தலைநகரில் நடைபெற்ற 2024 உலக ஸ்மார்ட் சிட்டி கண்காட்சி மாநாட்டை முன்னிட்டு மலேசிய பவிலியன் நிகழ்ச்சியை தொடக்கி வைத்து அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here