வேலை மோசடியில் சிக்கிக்கொண்ட 195 மலேசியர்கள் இன்னும் வெளிநாட்டில் உள்ளனர்: FM சைபுடின்

குவாந்தான், செப்டம்பர் 5 :

கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 2) நிலவரப்படி, வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்டதாக நம்பப்படும் மொத்தம் 195 மலேசியர்கள் இன்னும் வெளிநாட்டில் உள்ளனர் என்று வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் அப்துல்லா கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் கம்போடியாவிலும் (148 பேர்), அதைத் தொடர்ந்து தாய்லாந்து (23 பேர்), லாவோஸ் (22 பேர்) மற்றும் மியன்மார் (2 பேர்) ஆகிய நாடுகளில் உள்ளனர்.

இதுவரை கம்போடியாவிலிருந்து மொத்தம் 65 மலேசியர்களும், தாய்லாந்து மற்றும் லாவோஸில் தலா 10 பேரும், மியான்மரில் இருவரும் வெற்றிகரமாக மீட்கப்பட்டதாக சைபுடின் கூறினார்.

“வெளிநாட்டில் வேலை மோசடி மும்பல்களால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் அல்லது அவர்களின் உறவினர்கள் முன் வந்து, அடுத்த நடவடிக்கைக்காக போலீசில் புகாரளிக்குமாறு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்துகிறது. பெறப்பட்ட அனைத்து அறிக்கைகள் அல்லது ஆவணங்கள் சம்பந்தப்பட்ட நாட்டிலுள்ள மலேசியப் பிரதிநிதிக்கு நேரடியாக அனுப்பப்படும்.

“விசாரணைகள், உளவு, மீட்பு முயற்சிகள், ஆவணங்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய சம்பந்தப்பட்ட நாடுகளின் நடைமுறைகள் மற்றும் சட்டங்களுக்கு உட்பட்டு, சம்பந்தப்பட்ட நாடுகளின் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் அவற்றுக்கான பின்தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், ஆனால் அதற்கு நேரம் ஆகலாம்” என்று, நேற்று நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

சைபுடினின் கூற்றுப்படி, சம்பந்தப்பட்ட நாடுகளின் உள்ளூர் அதிகாரிகள் தங்கள் நாட்டில் இருக்கும் மலேசியர்களைக் கண்டறிய தொடர்ந்து ஒத்துழைப்பையும் உதவியையும் வழங்குகிறார்கள்.

மலேசியர்கள் எளிதில் ஏமாந்துவிட வேண்டாம் என்றும், வெளிநாட்டில் வேலை செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட நாட்டிலுள்ள பிரதிநிதி அலுவலகம் அல்லது விஸ்மா புத்ராவில் அவ்வேலைகளின்தன்மைகளை சரிபார்க்கவும் அவர் அறிவுறுத்தினார்.

மேலும், பயணத்தைத் தொடங்குவதற்கு முன் சரியான விசாவைப் (வேலைவாய்ப்பு விசா) பெறவும், சலுகைக் கடிதம் மற்றும் வேலைவாய்ப்பு ஒப்பந்தம் புரிந்துகொண்டு எழுத்துப்பூர்வமாக சீல் வைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்து, சட்டப்பூர்வ வழிகளில் பயணம் செய்யவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

“பெரும்பாலும் மோசடிக்கு ஆளாகுபவர்கள், பதின்ம வயதினர் மற்றும் 20களின் முற்பகுதியில் இருப்பவர்கள், 2000 அமெரிக்க டோலர்களுக்கு மேல் லாபகரமான சம்பளம், அதிக கொடுப்பனவுகள் மற்றும் ஊதிய விடுமுறைகள் உட்பட பல்வேறு வசதிகள் வாக்குறுதியளிக்கப்பட்டதால் அவர்கள் ஈர்க்கப்படுகிறார்கள்,” என்று அவர் கூறினார். .

பாதிக்கப்பட்டவர்கள் வெளிநாட்டில் உள்ள மலேசியர்களுக்கான தூதரக உதவிப் பிரிவை bkrm@kln.gov.my என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் உள்ள அனைத்து குடிமக்களும் அருகிலுள்ள மலேசிய தூதரகங்கள் அல்லது https://ekonsular.kln .gov.my/login என்ற முகவரியில் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று சைஃபுடின் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here