கோலோக் ஆற்றங் கரையில் 69 தோட்டாக்கள், போதைப்பொருட்கள் கொண்ட பை பொது நடவடிக்கைப் படையினரால் கண்டெடுப்பு

கோத்தா பாரு, செப்டம்பர் 7 :

நேற்று செவ்வாய்க்கிழமை (செப். 6) பொது நடவடிக்கைப் படையின் (GOF) 9வது பட்டாலியன், தும்பாட்டின் கோலா ஜம்பு அருகே உள்ள சுங்கை கோலோக் கரை புதரில் இருந்த ஒரு பையில் 69 பல்வேறு வகையான தோட்டாக்கள் மற்றும் போதைப்பொருட்களைக் கண்டுபிடித்தது.

நண்பகலில் மோட்டார் சைக்கிள்களில் ரோந்து வந்த GOF உறுப்பினர்கள் இதனை கண்டெடுத்ததாக, கிளாந்தான் காவல்துறை பதில் தலைவர் டத்தோ முகமட் ஜாக்கி ஹாருன் கூறினார்.

சந்தேகத்திற்கிடமான பையை சோதனை செய்ததில், அதில் 10 வகை தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 38 எஸ்பிஎல் யுஎஸ்ஏ, 9 மிமீ ரக 10 தோட்டாக்கள், 357 மேக் யுஎஸ்ஏ வகை 30 தோட்டாக்கள், 16 பக் ஷாட் 12 கேஜ் மற்றும் மூன்று 22 வகை தோட்டாக்கள் என்பன அடங்கும்.

இன்று புதன்கிழமை (செப்.7) இங்குள்ள கிளாந்தான் காவல் படைத் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தொடர்ந்து கூறிய அவர், “அந்த பையில் 240 யாபா மாத்திரைகள், 20 கிராம் சியாபு (மெத்தாம்பேட்டமைன்) மற்றும் கஞ்சா விதைகள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் ஒரு குழாய் ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டன” என்றார்.

அதனைத்தொடர்ந்து GOF குழு சுமார் இரண்டு மணி நேரம் அந்த இடத்தைக் கண்காணித்ததாகவும், ஆனால் யாரும் அந்த பையை உரிமைகோரவோ அல்லது அதனை எடுப்பதற்காகவோ நெருங்கி வரவில்லை. அதன் பின்னர் கைப்பற்றப்பட்ட வெடிமருந்துகள் மற்றும் போதைப்பொருள்கள் அனைத்தும் மேலதிக நடவடிக்கைக்காக கோலா ஜம்பு காவல் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன என்று முஹமட் ஜாக்கி கூறினார்.

“பிடிபட்ட பல்வேறு வகையான வெடிமருந்துகள் மற்றும் போதைப்பொருட்களின் மதிப்பு RM5,239 என மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் மலேசிய சந்தையில் விற்பனை செய்வதற்காக தாய்லாந்தில் இருந்து கடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

இந்த வழக்கு துப்பாக்கிச் சட்டம் 1960ன் பிரிவு 8(ஏ) மற்றும் ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952ன் பிரிவு 39ஏ(1) மற்றும் 12(2) ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படும்,” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here