தாவாவில் நடந்த கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய நால்வருக்கு போலீஸ் தடுப்புக் காவல்

கோத்தா கினாபாலு, செப்டம்பர் 15 :

தாவாவ் மாவட்டத்தில் சமீபத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேர் போலீஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர், மேலும் நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

அவர்களில் மூன்று பேர் கடந்த புதன்கிழமையிலிருந்து (செப்டம்பர் 14) விளக்கமறியலில் வைக்கப்பட்டனர், நான்காவது நபர் இன்று வியாழக்கிழமை முதல் (செப்டம்பர் 15) விளக்கமறியலில் வைக்கப்பட்டனர் என்று தாவாவ் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் ஜாஸ்மின் ஹுசின் கூறினார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களது வயது 22 முதல் 35 வரை என்றும் அவர் கூறினார்.

“தாவாவ் மாவட்ட நீதிமன்றம் அவர்கள் அனைவரையும் ஏழு நாள் தடுப்புக் காவலில் வைக்க அனுமதித்தது,” என்று அவர் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.

கடந்த செவ்வாய்கிழமை (செப்டம்பர் 13) நடந்த இந்தச் சம்பவத்தில், அதிகாலை 4.18 மணியளவில் ஃபஜர் தாவாவ், ஜாலான் மெர்டேக்கா 3 இல் பிஸ்ட்ரோவுக்குப் பின்னால், ஒரு நபர் சுயநினைவின்றி இரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

“பரிசோதனையில் அவர் இறந்துவிட்டார் என்றும் அவரது மார்பின் இடது பக்கத்தில் கத்தியால் குத்தப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது ” என்று ஏசிபி ஜாஸ்மின் கூறினார்.

தவறான புரிதலே கொலைக்கான காரணம் என்று நம்பப்படுவதாகவும், விசாரணையில் உதவ இன்னும் நான்கு பேரை போலீசார் தேடி வருவதாகவும் அவர் கூறினார்.

இதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் தாமாகவே முன் வந்து ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

“இந்த வழக்கு தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் எங்கள் மூத்த விசாரணை அதிகாரி ஜம்சரினா அஸ்ரிக்கு 016-7375868 என்ற எண்ணில் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்கலாம்” என்று ஏசிபி ஜாஸ்மின் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here