மலாக்கா, செப்டம்பர் 18 :
கனமழை பெய்து வருவதால் அலோர் காஜாவின் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அப்பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒன்பது குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 29 பேர் இரண்டு வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் அலோர் காஜா மாவட்டத்தில் உள்ள கம்போங் புக்கிட் தம்புன் மற்றும் கம்போங் புக்கிட் பாலாய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று, மலாக்கா குடிமைத் தற்காப்புப் படை (CDF) இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“பாலாய் ராயா புக்கிட் பாலாய் மற்றும் பலாய் ராயா புக்கிட் தம்புன் ஆகிய இரண்டு மையங்களும் நண்பகல் 1 மணி முதல் திறக்கப்பட்டுள்ளன.
மாலை 4 மணி நிலவரப்படி, மூன்று மாவட்டங்களில் உள்ள 22 பகுதிகள் இன்னும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன” என்று CDF செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
மலாக்கா தெங்கா மாவட்டத்தில் பெங்கலான் ராம பந்தாய், புக்கிட் பாயான், புக்கிட் பேருவாங் உத்தாமா, தாமான் தேசா துயோங், செமபோக் தாலம், கம்போங் சோலோக் புக்கிட் பாரு டுயோங், ஜம்படான் டுயோங், பெர்மாடாங் டுயோங், டுயோங் தெங்கா, புக்கிட் டுயோங், தாம்போய், கம்போங் ஆயிர் மோலேக் மற்றும் கம்போங் கண்டாங் ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் ஜாசினில், கம்போங் கீலாங் பெராபி, கம்போங் மெர்லிமாவ் பாசீர், பெசிசிர் சுங்கை மெர்லிமாவ், தாமான் மெர்லிமாவ் மெகா, தாமான் ஸ்ரீ மெர்லிமாவ், கம்போங் பாயா லெங்காங் மற்றும் கம்போங் ஸ்ரீ தஞ்சோங் ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இவ்விரு மாவட்டங்களிலும் இதுவரை எந்த நிவாரண மையங்களும் திறக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.