பொது நடவடிக்கை படை உறுப்பினரை தக்க முயன்ற சட்டவிரோத குடியேறிகள் கடத்தலில் ஈடுபடும் வெளிநாட்டவர் சுட்டுக் கொலை

பாசீர் மாஸ், செப்டம்பர் 22 :

இன்று அதிகாலை 1.40 மணியளவில் இங்குள்ள ஜெராம் பெர்டாவைச் சுற்றியுள்ள சட்டவிரோத படகுத்துறையில் நடந்த சம்பவத்தில், பாதுகாப்புப் பணியாளர்களைத் தாக்க முயன்ற சட்டவிரோத குடியேறியகளை கடத்துவதில் மூளையாக செயல்படும் ஒரு வெளிநாட்டவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கிளாந்தான் காவல்துறையின் பதில் தலைவர், டத்தோ முகமட் ஜாக்கி ஹருன் கூறுகையில், சம்பவம் நடந்த நேரத்தில், பொது நடவடிக்கைப் படையின் 9வது பட்டாலியன் உறுப்பினர்கள் தாய்லாந்தில் இருந்து மலேசியாவுக்கு ஆற்றைக் கடந்து வந்த ஒரு வெளிநாட்டவர்கள் குழுவைக் கண்டனர்.

அங்கிருந்த பொது நடவடிக்கைப் படையின் உறுப்பினர் அந்தக் குழுவைத் தடுத்து நிறுத்த முயற்சித்தபோது, அந்தக் குழுவில் இருந்த 30 வயதுடைய சந்தேக நபர் திடீரென அவரை கத்தியால் தாக்க முயன்றார்.

“தாக்குதல்களில் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள குறித்த உறுப்பினர் சந்தேக நபரின் இடது பக்கத்தில் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியிருந்தது. அதன் பின்னர் சந்தேக நபர் பாசீர் மாஸ் மருத்துவமனைக்கு (HPM) சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

இருப்பினும் “சந்தேக நபர் இன்று அதிகாலை 2.12 மணியளவில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தினார். அவரது இடது தோளில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் இருந்தது.

“சம்பவம் நடந்த இடத்தில் சோதனை செய்ததில், மியன்மார் பிரஜைகள் ஐந்து ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் தனிப்பட்ட பயண ஆவணங்கள் இல்லை மற்றும் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்ததாக நம்பப்படுகிறது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும் விசாரணையின் விளைவாக, இறந்த சந்தேக நபர், சம்பந்தப்பட்ட வெளிநாட்டவர்களை வேறொரு தரப்பினரிடம் ஒப்படைக்கும் முன்பு ஒரு இடத்தில் மறைத்து வைத்திருந்த ஒரு கடத்தல்காரன் என்பது கண்டறியப்பட்டது என்று முகமட் சாகி கூறினார்.

“சந்தேக நபருடையது என சந்தேகிக்கப்படும் வெடிமருந்துகளுடன் கூடிய ஸ்டையர் பிஸ்டல் மற்றும் ஒரு கத்தியையும் நாங்கள் கைப்பற்றினோம்.

“இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 307, ஆயுதச் சட்டம் 1960 பிரிவு 39, குடியேற்றச் சட்டம் 1959/63 இன் பிரிவு 55 E மற்றும் 6(1)(c) ஆகியவற்றின் படி விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here