தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மலேசியருக்கு 2 மாதம் சிறை – சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு

கோலாலம்பூர், செப்டம்பர் 23 :

வாக­னம் ஓட்­டு­வ­தற்­கான தேர்­வில் தோல்வி அடைந்­து­வி­டு­வோமோ என்ற அச்சத்தில், மற்­றொரு நபரை தேர்வு எழுத வைத்த மலே­சி­ய­ருக்கு நேற்று, சிங்கப்பூர் நீதிமன்றம் இரு மாதங்கள் சிறைத் தண்­டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

கோ ஹா ஹோக் என்ற குற்றஞ்சாட்டப்பட்டவர் தனக்­குப் பதி­லாக மற்­றொ­ரு­வரை தேர்வு எழுத வைத்­தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டது.

ஷாங் ஷோங் ­லி­யாங் என்­ப­வ­ரு­டன் சேர்ந்து மோசடி குற்றத்தை செய்ததாக அவர்  நீதி­மன்­றத்­தில் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, கோவுக்கு, 52, நேற்று இரண்டு மாதம் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

கடந்த ஜூன் மாதம் எண் 2 உட்­லண்ட்ஸ் இண்­டஸ்­டி­ரி­யல் பார்க் 4ல் உள்ள சிங்­கப்­பூர் சேஃப்டி டிரை­விங் சென்­ட­ரில் இந்­தச் சம்­ப­வம் நடை­பெற்­றது.

அவ­ரது குற்­றத்­திற்கு உடந்­தை­யாக இருந்த ஷாங்­குக்­கு கடந்த ஜூலை 21ஆம் தேதி இரண்டு மாதம் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரில் வெளி­நாட்டு வாக­னங்­களை ஓட்­டு­வ­தற்கு ஜூலை­யில் தடை விதிக்­கப்­படும் என்று பயந்த கோ, அந்த சம­யத்­தில் கட்­டு­மான நிறு­வ­னத்­தில் பணி­யாற்­றிய அவர், மலே­சி­யா­வில் பதிவு செய்­யப்­பட்ட தனது மோட்­டார் சைக்­கி­ளைப் பயன்­ப­டுத்தி வந்­தார்.

சிங்­கப்­பூ­ரில் நீண்­ட­கா­லம் பணி­யாற்ற வேண்­டி­யி­ருந்ததால் அவர் சிங்­கப்­பூ­ரில் மோட்­டார் ­சைக்­கிளை வாங்கி தனது மலே­சிய வாக­ன உரி­மத்தை சிங்­கப்­பூர் உரி­ம­மாக மாற்­ற­ முடிவு செய்­தார்.

ஆனால் அடிப்படை எழுத்துத் தேர்வுக்கு அவர் அஞ்சினார்.

இதனால் தனது நண்பர் ஒருவர் மூலம் முன்பின் அறியாத முகவரிடம் மற்றொருவரை தேர்வு எழுத ஏற்பாடு செய்தார். அதற்காக சிங்கப்பூர் டொலர் 500 கொடுக்கவும் அவர் முன் வந்தார்.

அதனைத் தொடர்ந்து, இவ்வாண்டு ஜூன் 28ஆம் தேதி கோ, எஸ்எஸ்டிசிக்கு வெளியே அந்த முகவரைச் சந்தித்து சிங்கப்பூர் டொலர் 500 கொடுத்தார். அப்போது அவருக்குப் பதிலாக மற்றொருவர் தேர்வு எழுதுவார் என முகவர் உறுதியளித் தார்.

இதன் பின்னர் காப்பிக் கடையில் கோ காத்திருந்தார்.

இதற்கிடையே சீன நாட்டவரான ஷாங் முகவரிடம் சிங்கப்பூர் டொலர் 200 பெற்று தேர்வு எழுத ஒப்புக் கொண்டார்.

தேர்வு நாளான ஜூன் 28ஆம் தேதி தேர்வு அதிகாரி கோவின் பெயரை குறிப்பிட்டு அழைத்தபோது ஷாங் பதிலளித்தார்.

முகக்கவசத்தை அகற்ற தேர்வு அதிகாரி கூறினார். அப்போது முகம் மாறுபட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அதிகாரி அவரது ஆவணங்களை சோதனையிட்டார். இதையடுத்து அவர்களுடைய கூட்டு மோசடி வெளிச்சத்துக்கு வந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here